திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்த சூழலிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் இருவேறு கருத்து இல்லை என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமது கருத்துக்கு கருணாஸ் வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையில், அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது, ஆளுக்கொரு நீதி, வேளைக்கொரு நியாயம் என்பதையே தெளிவாக்குவதாக கூறியுள்ளார்.
தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறியதோடு, நீதிமன்றத்தையும் காவல்துறையையும் தரக்குறைவாக விமர்சித்த பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல, பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம், எம்.எல்.ஏ. கருணாசுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னணி குறித்து கவலைப்படாமல், கைது செய்ய வேண்டியவர்களை உடனே கைது செய்தும், விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்கவும் வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதே கேள்வியை, டி.டி.வி. தினகரனும் எழுப்பியுள்ளார்.