தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக கடலினுள் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைந்தால் மீன்வளம் பாதிக்கப்படும், இயற்கை வளங்கள் அழியும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி பகுதிக்கு திரண்டு வந்து, அங்கு கடலுக்குள்ளேயே படகுகளில் நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனல்மின் நிலைய திட்டத்திற்கு எதிராகவும், கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் புன்னக்காயல் முதல் வேம்பார் வரை அந்தந்த பகுதியில் திரண்டு நாட்டுப் படகுகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில், இது தொடர்பாக 300பேர் மீது கூடங்குளம் மரைன் போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.