சென்னை சைதாப்பேட்டையில் கடந்த ஞாயிறன்று தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரான கதிர் என்பவர் நாள்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவது குறித்து கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து தமிழிசை அருகே நின்று கொண்டிருந்த பா.ஜ.கவினர் ஆட்டோ ஓட்டுனரை அங்கிருந்து அப்புறப்படுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் கதிர் வீட்டுக்கு தமிழிசை சவுந்திரராஜன் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ஆட்டோ ஓட்டுனரை பா.ஜ.கவினர் தாக்கவே இல்லை என்றார். மேலும் ஊடகங்கள் ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக தவறான தகவல்களை பரப்புவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆட்டோ ஓட்டுனர் கதிர், தான் தகராறு செய்ய வேண்டும் என்று பெட்ரோல் விலை குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பவில்லை என்றார். நடந்த சம்பவங்களைத்தான் ஊடகங்கள் வெளியிட்டதாகவும், தன்னை பா.ஜ.கவினர் தாக்கியது உண்மை தான் என்றும் கதிர் திட்டவட்டமாக கூறினார்.