Forums › Communities › Farmers › கரும்புத் தோகையை உரமாக்கலாம்!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
September 18, 2018 at 5:00 pm #12929
Inmathi Staff
Moderatorகரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது.
கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற தோகைகளை நீக்க வேண்டும். அவற்றில் 28.6 சதவீதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவீதம் தழைச்சத்தும், 0.04-லிருந்து 0.15 சதவீதம் மணிச்சத்தும், 0.50-லிருந்து 0.42 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது.
மண்ணில் உள்ள நுண்துளைகளால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது; அங்ககத் தன்மை அதிகரிக்கிறது; ஊட்டச் சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது.
உலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா, ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சாணங்களைப் பயன்படுத்தலாம். இதனுடன், ராக் பாஸ்பேட், ஜிப்சம் முதலியவற்றைச் சேர்ப்பதன் மூலம் மக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.
செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்கிய உரம் தயாரிக்க குழி ஏற்படுத்திச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மண்ணின் மேற்பரப்பிலேயே மக்கிய உரம் தயாரிக்கலாம். உலர்ந்த தோகை நீளமானது. இதைக் கையாளுவதும் குவிப்பதும் கடினம். எனவே, உலர்ந்த தோகைகளை சிறுசிறு துண்டுகளாக்கி பின்னர் பயன்படுத்தலாம். இதனால் அளவு குறைவதுடன், வெளிபரப்பு அதிகரிக்கிறது. உலர்ந்த தோகைகளில், அதிக இலைப்பரப்பும், நுண்ணுயிரிகளும் அதிகமாக காணப்படும்.
இது மக்குவதை ஊக்குவிக்கிறது. சிறு துண்டுகளாக்கும் கருவியைப் பயன்படுத்தி அனைத்துத் தோகைகளையும் துண்டுகளாக்கலாம்.
கரும்புகளைத் துண்டுகளாக்கும் கருவியை இதற்குப் பயன்படுத்தலாம். தோகையைத் துண்டுகளாக்காமல் மக்குதல் நிகழ்ச்சி துரிதமாக நடக்க வாய்ப்பில்லை.
இடுபொருள்கள்
வேளாண் பல்கலைக்கழகம் “பயோமினரலைசர்’ என்ற நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவையை மக்குவதை ஊக்குவிக்கப் பரிந்துரைக்கிறது. 1 டன் தோகைக்கு 2 கிலோ பயோமினரலைசர் பரிந்துரைக்கப்படுகிறது. பயோமினரலைசர் இல்லாமல் மக்கிய உரத்தை மிக விரைவில் தயாரிக்க முடியாது. இதுதவிர, மற்றொரு இடுபொருள் சாணக் கரைசல். சாணக் கரைசலில் மக்குவதற்கு உகந்த நுண்ணுயிரி குறைவாக இருப்பதால், மக்கும் காலம் அதிகமாகிறது.
கோழி எரு, கரிமச்சத்து, தழைச்சத்து விகிதத்தை குறைக்க ஆதாரமாகப் பயன்படுகிறது. ஒரு டன் தோகைக்கு 50 கிலோ சாணம் பரிந்துரைக்கப்படுகிறது. இதை 100 லிட்டர் நீரில் கலந்து பின்னர், தோகையோடு கலக்க வேண்டும். ராக்பாஸ்பேட் 5 கிலோவை ஒரு டன் கழிவுக்கு சேர்ப்பதால், மணிச்சத்தின் அளவு உயர்த்தப்படுகிறது.
அனைத்து இடுபொருள்களை இட்ட பின்பு, கழிவுகளால் குவியல் உருவாக்க வேண்டும். இது 4 அடி உயரத்துக்கு இருந்தால் நல்லது. ஏனெனில் குவியலுக்குள் வெப்பம் உருவாக்கப்பட்டு, அது நிலைநிறுத்தப்பட இந்த உயரம் அவசியம்.
கழிவுகளை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும். குவியலுக்குள் காற்றோட்டம் இருந்தால் மட்டுமே நன்றாக மக்கும். அது மட்டுமன்றி கீழிருக்கும் கழிவுகள் மேலும், மேலிருக்கும் கழிவுகள் கீழும் திருப்பிவிடப்படுகிறது. இதனால் கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மக்குகிறது. மக்கும் உரம் தயாரிக்கும் முறையில் கழிவுகளில் 60 சதவீதம் ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் அனைத்தும் இறந்துவிடும் அபாயமுண்டு. ஈரப்பதம், மக்குவதற்கு முக்கிய காரணி.
அளவு குறைதல், மண் வாசனை, பழுப்பு கலந்த கருமை நிறம், இவை மக்குதல் முதிர்வைக் கண்டறிய உதவுகிறது. இந்த நிலையை அடைந்த பிறகு மக்கிய உரத்தை பிரித்து உலரவிட வேண்டும். 24 மணிநேரத்துக்குப் பிறகு மக்கிய உரத்தை சலிக்க வேண்டும். பின்பு கிடைக்கும் கழிவுகளை மறுபடியம் மக்கச் செய்யலாம். மக்கிய உரத்துடன், நுண்ணுயிரிகளான அசிட்டோபாக்டர் அúஸாஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றைக் கலப்பதால் அவை மேலும் ஊட்டமேற்றப்படுகிறது. 20 நாளில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் ஹெக்டேருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது. இது வயலில் உழப்பட்டு மீண்டும் கரும்பு வயலுக்கு உரமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம் என்றனர்.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.