போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டனில் உள்ள மின்சாரப் பேருந்து பணிமனையை பார்வையிட்டார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேலைநாடுகளின் முன்னேறிய மாநகரங்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் சி – 40 முகமையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி – 40 முகமையின் பிரதிநிதிகள் கடந்த மாதம் சென்னையில் தங்கி ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சி 40 முகமையின் அழைப்பை ஏற்று லண்டன் சென்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் லண்டனில் மின்சாரப் பேருந்தையும், பணிமனையையும் பார்வையிட்டதாகவும், லண்டன் போக்குவரத்து அமைப்பின் தலைவர் டாம் குன்னிங்டன், ஆலோசகர் மைக் வெஸ்டன் உள்ளிட்டோருடன் மின்சாரப் பேருந்துகளை இயக்குதல், நிர்வகித்தல் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.