தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மீனவர்கள் நல சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் பினோய் ஜார்ஜ் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டு அதிகாரிகள், மீனவ சங்கங்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள குழுவின் கூட்டத்தில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பேச இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீன்பிடி படகுகளை கண்காணிக்க ஆயிரத்து 215 படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் அதுகுறித்த தகவலை பெற முடியுமா என்பது குறித்து நாளை மறுநாள் நேரில் ஆஜராகி பதிலளிக்க, கடலோர காவல் படையின் தென்மண்டல கமாண்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை குறித்து மீன்வளத்துறை இணை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.