நேற்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதை அடுத்து, பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உடுமலை சாலை தீவு திடல் பூங்காவிலுள்ள, தந்தை பெரியாரின் சிலை மீது ஒரு ஜோடி காலணிகளை வைத்து அவமரியாதை செய்த விவகாரத்தில் செங்கல் சூளை உரிமையாளர் நவீன் என்பவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதே போன்று, சென்னை சிம்சனில், விடுதலை சிறுத்தை கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கையில் ஜெகதீசன் என்பவர் செருப்பை கழற்றி வீசினார். அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னை சிம்சன், வேப்பேரி, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.