காய்கறி மகசூலுக்கு ஏற்ற குழித்தட்டு நாற்றங்கால்

Forums Communities Farmers காய்கறி மகசூலுக்கு ஏற்ற குழித்தட்டு நாற்றங்கால்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12861
  Inmathi Staff
  Moderator

  காய்கறி மகசூலைப் பெருக்க குழித்தட்டு நாற்றங்கால் தயாரிப்பு முறை மிகவும் ஏற்றது என்று தோட்டக் கலை, மலைப் பயிர்கள் துறையின் காஞ்சிபுரம் மாவட்டத் துணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

  காய்கறிகள் நமது ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கவல்ல வைட்டமின்கள், தாது உப்புகளை கொண்டதோடு, மருத்துவக் குணங்களையும் அளிக்க வல்லவை.

  ஒரு மனிதன் தினமும் 284 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டும். ஆனால் நாம் 110 கிராம் அளவு காய்கறிகளைத்தான் உண்கிறோம்.

  ஆகவே அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது. அதற்கு குழித்தட்டு நாற்றங்கால் தயாரிப்பு மிகச் சிறந்தது.

  அமைக்கும் முறை:

  ஒரு ஏக்கர் நடவு செய்யத் தேவையான 10 ஆயிரம் நாற்றுக்களை உற்பத்தி செய்ய 120 குழித் தட்டுகள், 150 கிலோ தென்னை நார்க் கழிவு உரம், 1.5 கிலோ வீதம் டிரைகோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் கலக்க வேண்டும்.
  இதன்மூலம் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
  குழித் தட்டுகளில் ஊடகத்தை நிரப்பி, ஒரு தட்டின் மேல் மற்றொரு தட்டை வைத்து மெதுவாக அழுத்த வேண்டும்.
  பின்னர் மீண்டும் ஒருமுறை ஊடகத்தை நிரப்பி அதில் ஒரு விதை வீதம் ஊன்றி, பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.
  பின்னர் தட்டுகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். ஒரு அடுக்கில் 10 முதல் 20 தட்டுகள் வரை அடுக்கலாம்.
  பின்னர் இந்த அடுக்கை பாலிதீன் தாள் கொண்டு மூடி 3 நாள்கள் வரை மூட்டமிட வேண்டும்.
  3 நாள்களுக்கு பின் பாலிதீனை அகற்றிவிட்டு, மூட்டத்தை அகற்றி முளைத்த நிலையில் விதைகள் உள்ள குழுத்தட்டுகளை, நிழல் வலைக்குடிலில் அமைக்கப்பட்டுள்ள பாத்திகளில் இரு வரிசைகளாக அடுக்க வேண்டும்.
  முளைத்து வரும் நாற்றுகளுக்கு பூவாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும். வணிக ரீதியாக நாற்றுகள் உற்பத்தி செய்வோர், மிஸ்டர் எனப்படும் தெளிப்பான்களைக் கொண்டு நீர் தெளிக்கலாம்.
  அதிக மழையின்போது பாத்திகளின் மேல் அமைக்கப்பட்ட கம்பிகளின் மேல், பாலிதீன் கொண்டு மூட வேண்டும்.
  இவ்வாறு செய்தால் மழையினால் நாற்றுகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். குழித்தட்டுகளில் வளரும் நாற்றுகள் 25 நாள்களில் நடவுப் பருவத்தை அடையும்.
  நாற்றுகளை சேதமின்றி எவ்வாறு கொண்டு செல்வது?
  இந்த குழித்தட்டுகளின் இரு முனைகளையும் உட்புறமாக மடக்கி நாற்றுகள் உள்ளிருக்குமாறு வைத்து வாகனங்களில் அடுக்கி எடுத்துச் செல்லலாம். வாகனங்களில் அலமாரி தட்டுக்கள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அவற்றிலும் அடுக்கி எடுத்துச் செல்லலாம்.
  குழித்தட்டுகளில் உள்ள நாற்றைப் பிடித்து மெதுவாக இழுக்கும்போது வேர்கள் சேதமடையாமல் ஊடகத்தைச் சுற்றி வேர்கள் படர்ந்த நிலையில் கிண்ணம் போன்ற அமைப்பு வெளிவரும்.
  இதை நடவு செய்வதால் உடனடியாக நாற்றுகள் எந்தச் சேதமுமின்றி செழித்து வளரும். மேலும் கூடுதல் மகசூல் பெற்று நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்றார் கோல்டி பிரேமாவதி.
  நன்றி: தினமணி

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This