முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், திருத்தப்பட்ட புதிய மனுக்களை தாக்கல் செய்யுமாறு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என குண்டுவெடிப்பின்போது பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதன்மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை திருத்தி, புதிதாக 3 வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.