சருகு உரம் எப்படித் தயாரிப்பது?
மரங்கள் அமைந்திருக்கும் வளாகத்தின் ஒரு மூலையில் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லது விழும் இலைகளின் அளவுக்கேற்ப குழிகளை வெட்டி அவற்றில் உலர்ந்த இலைகளைப் போட்டு வைத்தாலே போதும். பசுஞ்சாணம், இதர கழிவு கிடைத்தால் அக்குழிகளில் சேர்க்கலாம். கிடைக்காத பட்சத்தில், உரக் கடைகளில் கிடைக்கும் நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையைத் தண்ணீரில் கலந்து, அக்குழிகளில் பரவலாக ஊற்றலாம்.
இரண்டும் முடியாத நேரங்களில் வாரத்துக்கு ஒருமுறை நீர் தெளித்தாலே போதும். குழிகளில் உள்ள இலைகளைக் கிளறி விட வேண்டும். இப்படி நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குச் செய்த பிறகு, மக்கிய உரம் கிடைக்கும். அழகுப் புல்வெளிகள் அமைப்பதற்கு முன் இந்த மட்கு உரக் கலவையைப் பரப்பி, அதன்மீது மண்ணைப் பரப்பிப் புற்களை நடலாம்.
இப்படி எதுவுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பெருக்கிச் சேர்த்த இலைகளை மூட்டைகளாகக் கட்டி அருகிலுள்ள விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தாலே, அவற்றை அவர்கள் நிலத்தில் இட்டு மண்வளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
சருகை மக்கவைத்து உரமாக்குவதைப் பெரிய வளாகங் களில் மட்டும்தான் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டு மரங்களிலிருந்து விழும் இலைகளைக் கொண்டும் மட்கு உரம் தயாரிக்கலாம். இதற்கு மூன்று அடிக்கு மூன்று அடி குழி வெட்டி இலைகளைப் போட்டுச் சாணக் கரைசலை ஊற்றி வந்தாலே போதும்.
குழி வெட்ட இயலாவிட்டால் பயனற்ற வாளி, கெட்டியான பிளாஸ்டிக் பைகளிலும் இதைச் செய்யலாம். நான்கு மாதங்களில் மட்கு உரம் தயாராகிவிடும். வீட்டுப் பூச்செடிகளில் அரை அடி ஆழத்துக்கு மண்ணை அப்புறப்படுத்திவிட்டு இந்த மக்கிய உரத்தைப் போட்டு, அகற்றிய மண்ணை மேலே இட்டு நீர் பாய்ச்சினால் சிறந்த பலன் கிடைக்கும். மரங்களுக்கும், மாடித்தோட்டச் செடிகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
இலைகளை எரிப்பதைத் தடுப்பதன் மூலம் உரம் கிடைப்பது மட்டுமல்லாமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ‘புவி வெப்பமயமாதலையும்’ சிறிதளவாவது தணிக்கலா