சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்

Forums Communities Farmers சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12724
  Inmathi Staff
  Moderator

  சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

  கறவை மாடு வளர்ப்பில் சினைப் பசுக்களுக்கு உரிய பராமரிப்பு செய்யாவிட்டால், கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு நஷ்டத்தை உருவாக்கும்.
  இந்தப் பாதிப்புகளைத் தடுக்க சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், மிரட்டுதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது.
  கருவிலுள்ள இளங்கன்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை கொடுக்க வேண்டிய தாலும், பால் உற்பத்திக்குத் தேவையானச் சத்துக்களை உடம்பில் சேமிக்க வேண்டியதா லும் சினை மாட்டுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும்.
  ஏழாம் மாதம் சினை முடிந்ததும் சினைப் பசுவைத் தனிக் கொட்டகையில் வைத்து பராமரிப்பதுடன், 45 நாள் முதல் 60 நாள் வரை பால் வற்றச் செய்ய வேண்டும்.
  45 நாள்களுக்குக் குறைந்த வற்றுக்காலம் உள்ள பசுக்களுக்கு மடி சரியான அளவு சுருங்காமலும், 60 நாள்களுக்கு மேல் வற்றுக் காலமுள்ள பசுக்களில் அதிக நாள்கள் பால் கறக்காமல் இருப்பதாலும் அடுத்த ஈற்றில் குறைவான அளவே பால் கிடைக்கும்.
  அதன்படி, பால் வற்றுக் காலத்தில் தீவன அளவில் 50 சதம் குறைத்து ஒரேடியாக பாலை வற்றச் செய்ய வேண்டும்.
  பகுதியளவு பாலைக் கறப்பதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் பாலைக் கறப்பதும் பால் வற்றக் கூடுதல் நாள்களாவதுடன், மடி நோயையும் உண்டாக்கக் கூடும்.
  பால் வற்றச் செய்வதால் வளரும் கருவுக்கு தகுந்த ஊட்டச்சத்துகள் கிடைப்பதுடன், கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும்.
  மடி சரியான விகிதத்தில் சுருங்கி அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும்.
  தொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள், உணவு மண்டல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
  தீவன மேலாண்மை:

  ஏழாவது மாதம் முதல் கன்றின் வளர்ச்சி துரிதமடைவதால் தீவனத் தேவை அதிகரிக்கும்.
  எனவே, சினை மாடுகளுக்கு தினமும் பசுந்தீவனம் 15 முதல் 25 கிலோவும், உலர் தீவனம் 6 முதல் 8 கிலோ வரையும், அத்துடன் தாது உப்பு கலந்த 2 கிலோ அடர் தீவனமும் 3 மாதங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.
  கன்று ஈனுவதற்கு மூன்று நாள்கள் முன்பு மலச்சிக்கலைத் தவிர்க்க தவிடு சற்று அதிகமாக கொடுக்கலாம்.
  பசுந்தீவனத்தின் மூலம் கிடைக்கும் வைட்டமின் ஏ சத்து பசுக்களின் கருப்பை, பிறப்புறுப்புக் கூறுகளின் திசு வளர்ச்சிக்கும், நஞ்சுக் கொடியின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் பெறுகிறது.
  தவிர, 450 கிராம் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் கன்று ஈனும் போது எளிதாக இருக்கும்.
  ஆரோக்கியமான கன்றை ஈனவும், மாடுகள் கறவையில் இருக்கும் போது ஆரோக்கியமாகவும், உச்சக்கட்ட பால் உற்பத்தி காலத்தில் பால் அளவும் அதிகரிக்கவும், சினைப் பிடிக்கும் திறன் அதிகரிக்கவும் சினைப் பருவத்தில் கடைசி 30 நாள்களுக்கும், கன்று ஈன்ற பிறகு 70 நாள்களுக்கும் தீவன பராமரிப்புச் செய்ய வேண்டும்.
  கொட்டில் அமைப்பு:

  சினை மாடுகளுக்கு இடவசதியும், தரை அமைப்பும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.
  ஏழாவது மாத சினைக் காலம் முதல் கன்று ஈனும் வரை தனது உடலமைப்பை மெல்ல மாற்றத் துவங்கும்.
  இந்தக் காலகட்டத்தில் மாடுகள் வழுக்கி விழுந்தாலோ அல்லது பலத்த அடிபட்டாலோ கருப்பைச் சுழற்சி ஏற்படவும், சில சமயங்களில் கன்று உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
  எனவே, கொட்டில் தரையை எப்போதும் வழுக்காமல் இருக்கவும், பாசி, சாணப் பற்று இல்லாமல் சுத்தமாக வைப்பதும் அவசியமாகும் என்றனர் அவர்கள்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This