மீனவர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் டீசல் விலை உயர்வு

Forums Communities Fishermen மீனவர்கள் வாழ்க்கையை சீரழிக்கும் டீசல் விலை உயர்வு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12493
  Kalyanaraman M
  Keymaster

  டீசல்  விலை   உயர்வு   ஒட்டு  மொத்த  மீனவர்களின்  வாழ்வாதாரத்தை  சீரழித்து  வருவது  மீனவர்கள்  மத்தியில்  அச்சத்தை   ஏற்படுத்தியுள்ளது.

  இந்தியாவில்   உள்ள 13   கடற்கரை   மாநிலங்களில்   வாழும்    மீனவர்கள்   கடலில்,     இரும்பு    மற்றும்   மரத்திலான   64  அடி வரையிலான    பெரிய   விசைப்படகுகளில்    ஆழ்கடலில்   மீன்  பிடிக்கச்   செல்கின்றனர்.  இவர்கள்    படகில்   4  நாட்கள்   முதல்   10   நாட்கள்   வரை   நடுக்கடலில்   தங்கி   மீன்பிடிப்பவர்கள்.    இத்தகைய   படகுகளில்   செல்பவர்கள்    ஒருவார  காலம்   கடலில்   பயணித்து   ஒரு   வாரம்   அல்லது    10  நாட்கள்    அங்கு  தங்கி   மீன்  பிடித்து   விட்டு   கரைக்கு   திரும்பக்கூடியவர்கள்.   மரத்திலான    50   அடி    அளவு   நீளம்     கொண்ட  படகுகளில்   கடலில்   மீன்   பிடிக்கச்செல்பவர்கள்   ஓரிரு   நாட்கள்   முதல்  நான்கு   நாடகள்   வரை   கடலில்   தங்கி    மீன்   பிடிப்பார்கள்.

  இது  தவிர  30  அடி  நீளம்  வரையுள்ள  பைபர்   படகில்    சென்று  அண்மைக்கடலில் மீன்  பிடிக்கும்  மீனவர்கள்     அன்றாடம்   கரைக்கு   திரும்பும்    மீன்   பிடி   தொழிலில்   ஈடுபட்டுள்ளனர்.

  மேலும்   பைபர்   கட்டுமரத்தில்   கரைக்கு  கையோடு  எடுத்து  வரக்கூடிய   இன்ஜினை (Out Board Engine)   பொருத்தி   கடலில்  சென்று   மீன்   பிடிக்கக்கூடியவர்களும்    உள்ளனர்.

  எல்லா   வகையான   மீன்   பிடி   தொழிலுக்கும்   மீனவர்களுக்கு   தேவையான   அத்தியாவசிய   மூலப்பொருள்   டீசல்   மட்டும்    தான்.   நாட்டின்   சில  பகுதிகளில்  இன்ஜின்  பொருத்தப்பட்ட கட்டுமரங்களுக்கு  குறிப்பாக   கேரளாவில்  மண்  எண்ணை   மூலப்பொருளாக   பயன்படுத்தப்  படுகிறது .

  இத்தகைய   டீசல்   மீனவர்களுக்கு   அந்தந்த   கடற்கரை   மாநில  அரசுகள்,   மாநில   அரசின்   வாட்  வரியை  கழித்துக்கொண்டு   மீதி  விலைக்கு    விற்பனை    செய்கிறது.     அல்லது    வாட்   வரியை  மானியமாக   மீனவர்களுக்கு     வழங்கி    வருகிறது.

  மாநில   அரசுகள்  வாட்  வரி  மானியம்  வழங்கி   வந்தாலும்  அந்த  மானியம்  பல  மாநிலங்களில்  வறுமை  கோட்டிற்கு  கீழ்  உள்ள  மீனவர்களுக்கு   மட்டுமே    வழங்கப்படுவதால்    மிக   குறைந்த எண்ணிக்கையிலான     மீனவர்கள்  மட்டுமே    பயன்    பெற்று     வருகின்றனர்.

  தமிழ்நாடு,  புதுச்சேரி  உள்ளிட்ட   பெரும்பாலான   மாநிலங்களில்  வாழும்  மீனவர்கள்   ஆழ்   கடலில்   பல  நாட்கள்  தங்கியிருந்தும்     அண்மைக்கடலில்    சில   நாட்கள்   தங்கியிருந்து   மீன் பிடித்து  வருவதாலும்  அவர்களுக்கு   இந்த   மானியம்   போதிய   பயன்  அளிக்கவில்லை.

  டீசல்,  பெட்ரோல்  விலையை  பெட்ரோலிய  நிறுவனங்கள   நிர்ணயிக்கும்  கொள்கையை   மத்திய  அரசு  எடுத்த  நாளிலிருந்து  பல  ஆண்டுகளாக  ஒவ்வொரு  நாளும்  உயர்ந்து  வரும்  டீசல்  விலை  உயர்வு  மீனவர்களை   வெகுவாக   பாதித்து   வருகின்றது.

  அதிலும்  குறிப்பாக   சமீப  காலங்களில்  உயர்ந்து  வரும் விலையேற்றம்   மீனவர்களின்   வாழ்வாதாரத்திற்கு   மிகப்பெரிய  பேரிடியாக    அமைந்துள்ளது.

  மீன்   பிடி   தடை  காலத்திற்கு   பிறகு  கடலில்   மீன்  உற்பத்தி   அதிகமாகி   கூடுதலாக   மீன்   பிடிக்க   முடியும்   என்று   வல்லுநர்களும்,   மத்திய   மாநில   அரசுகளும்    மீனவர்களும்    நம்பி    வந்தனர்.

  ஆனால்,   இரண்டு  ஆண்டுகளாக   மீன்  பிடி  தடை காலத்திற்கு   பின்னரும்,   கடலில்   வாழ்வாதாரத்துக்கு  தேவையான   மீன்கள்   கிடைப்பதில்லை    என்பது   தான்    நிதர்சனமான    உண்மையாகும்.

  பல   கடற்கரை   மாநிலங்களிலும்   இது  பற்றி   அந்தந்த   மாநில மீனவர்    அமைப்புகள்    ஒன்று    கூடி    கலந்து   ஆலோசித்து    தங்களுடைய  தேசிய  அளவிலான  மீனவர்  அமைப்புகளிடம்   தெரிவித்துள்ளனர்.   அதன்   அடிப்படையில்    கடந்த   சில   மாதங்களுக்கு  முன்பு   தேசிய   மீனவர்   பேரவை  தலைவரும்   புதுச்சேரி   மாநில  முன்னாள்   எம்.எல்.ஏ  வுமான   மா.  இளங்கோ   மத்திய   மீன்வளத்துறை  அமைச்சர்    திரு    ராதா   மோகன்சிங்    உள்பட    மத்திய    மாநில    அரசுகளின்    கவனத்திற்கு  இப்பிரச்சனையை     எடுத்துச்  சென்றால்,கடந்த   மாதம்   மத்திய  அமைச்சர்   திரு  ராதா  மோகன்சிங்   தலைமையில்   நடைபெற்ற   அனைத்து   கடற்கரை   மாநில    மீன்வளத்துறை   அமைச்சர்கள்    மாநாட்டிலும்   இந்த   பிரச்சனை    விவாதிக்கப்பட்டது.

  இது  போன்று   கடலில்  மீன்  அற்றுப்போன   சூழலில்   மீன்  பிடிக்க  கடலில்    செல்வதற்கு    அத்தியாவசிமான   எரி  பொருளான   டீசலுக்கு   மட்டும்   ஒரு   முறை   கடலுக்கு     செல்வதற்கு    அதிகபட்சமாக    1  லட்சம்  ரூபாய்    வரை    செலவிட   வேண்டியுள்ளது.

  அவ்வாறு  செலவழித்து  சென்றாலும்   அந்த  மூலதனத்தையாவது மீட்டு  எடுப்பதற்கு   வருவாய்   கிடைக்குமா   என்றால்   பல  நேரங்களில்   சாப்பாட்டு    செலவுக்கு    கூட  மீன்  கிடைக்காமல்   வெறுங்கையுடன்  கரை  திரும்ப வேண்டியிருக்கும்.

  சாதாரணமாக   ஒரு   டாக்சி   ஓட்டுனரோ,  ஆட்டோ   ஓட்டுனரோ   சவாரி  செல்லும்   போது   மட்டுமே   அவருக்கு   டீசல்  செலவாகும்,  அவ்வாறு  சவாரி   சென்று  வந்தால்   அதன்  மூலம் நிச்சயமாக     அவருடைய   வருவாயில்   டீசல்   செலவு  போக   மீதம்   அவருக்கு   நிகர   வருவாயாக    இருக்கும்.

  ஆனால்  மீனவர்கள்  ஆயிரக்கணக்கான  ரூபாய்   டீசல்  செலவழித்து   சென்று   வந்தாலும்,   வருவாய்     நிச்சயம்    இல்லை   என்பது  தான்   நிதர்சனம்.          இது  போன்று   நிலைமையில்      அன்றாடம்  உயர்ந்து    வரும்   டீசல்   விலை   வெந்த   புண்ணில்   வேல்   பாய்ச்சுவது   போல்  அமைந்து   விடுகிறது.

  இதனால்  டீசல்  விலை  உயர்வு   மீனவர்கள்  மத்தியில்  பெரும்  கொந்தளிப்பை   ஏற்படுத்தியுள்ளது.

  பல  காரணங்களை  காட்டி  மீனவர்கள்  கடலுக்கு  மீன் பிடிக்க    செல்வதையே    தவிர்த்து    வருகின்றனர்,

  தமிழகத்தின்   பல   கடற்கரை   மாவட்டங்களில்   மட்டுமன்றி   நாட்டின்  13  கடற்கரை   மாநிலங்களிலும்   இதே   நிலை   தான்    நீடித்து   வருகிறது.

  இதனால்   விவசாயிகளுக்கு   இலவச  மின்சாரம்   வழங்கப்படுவது போல்   மீனவர்களுக்கு   டீசல்  வழங்க வேண்டும்  என்று  கோரிக்கை நியாயமாக     விடுப்பது   நியாயமாக   இருக்காது   என்று  கருதி  கடந்த 6   ஆண்டுகளாக   தேசிய  மீனவர்   பேரவை   தலைவரும்   முன்னாள்    எம். எல். ஏ  வுமான   மா.  இளங்கோ   தலைமையில்   மத்திய   அரசை    அணுகி   மீனவர்களுக்கான   டீசலை   மத்திய   அரசின்   அடக்க     விலைக்கு   வழங்க வேண்டும்   என்று   தொடர்ந்து   கோரிக்கை   விடுத்து   வருகின்றனர்.

  மத்திய   அரசின்  இறக்குமதி   வரி   உற்பத்தி  வரி  போன்ற  வரிகள்  ஏதுமின்றி மத்திய அரசின் அடக்கவிலைக்கு  (Cost   Price) மீனவர்களுக்கு  தேவையான   டீசலை  வழங்க   வேண்டும்  என்று   முந்தைய   பிரதமர்  திரு.   மன்மோகன்   சிங்,    அப்போதைய   மத்திய   மீன்வளத்துறை  அமைச்சர்   திரு   சரத்   பவார் ,   தற்போதைய   பிரதமர்   திரு   நரேந்திர   மோடி  மீன்வளத்துறை   அமைச்சர்   திரு   ராதா   மோகன்   சிங்   ஆகியோர்களை  அணுகி   கோரிக்கை   விடுத்து   வருகின்றனர்.

  மூலதன   செலவினமாக    டீசலுக்காக    பெரும்   பங்கு   செலவழித்து,  அழியும்   பொருள்களான    படகு   வலை   மற்றும்   உபகரணங்களை   கொண்டு  பாரம்பரிய  மீன் பிடி  தொழிலில்  ஈடுபடும்  மீனவர்களின்  நிரந்தரமற்ற   வாழ்வாதாரத்தை   கருத்தில்   கொண்டு  அடக்க    விலைக்கே   டீசல்  வழங்க வேண்டும்.  என்று  மீனவர்கள்  கோரிக்கை  விடுத்து  வருகின்றனர்.

  மீனவர்களின்  வாழ்வாதாரம்  நிலைக்க  அடக்க  விலைக்கே  டீசல்  வழங்க   வேண்டும்   என்று      பல   முறை  மத்திய  அரசின்  கவனத்திற்கு    கொண்டு  சென்றுள்ளதாகவும்,    இப்பிரச்னைக்கு   இது  தான்  தீர்வு   என்று   தேசிய   மீனவர்  பேரவை   தலைவர்   மா.  இளங்கோ  அழுத்தம்  திருத்தமாக   கருத்து   தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This