கத்தரி சாகுபடி டிப்ஸ்!

Forums Communities Farmers கத்தரி சாகுபடி டிப்ஸ்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12481
  Inmathi Staff
  Moderator

  கத்தரிக்காய் மகசூல் அதிகரிக்க வழி கூறும், சிவகங்கை, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்துார்குமரன் கூறுகிறார் :

  கத்தரியில் ஒவ்வொரு ரகமும், ஒவ்வொரு அளவில் மகசூல் தரக்கூடியவை; அதிக மகசூல் தரும் வீரிய ரகங்களும் உள்ளன.ஒரு ஏக்கரில் விதைக்க, நாட்டு ரகம் எனில், 80 கிராம், வீரிய ரகம் எனில், 40 கிராம் போதுமானது.
  எந்த ரகமாக இருந்தாலும், அதை விதை நேர்த்தி செய்வதால், முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, நோய்களும் தடுக்கப்படும்.விதை நேர்த்திக்கு, 40 கிராம் அசோஸ் ஸ்பைரில்லத்தை, அரிசி வடிகஞ்சியில் கலந்து, விதையை அதில் மூழ்கி எடுத்து, நிழலில் இரண்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
  பின், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் என்ற அளவில், ‘டிரைக்கோடெர்மா விரிடி’ அல்லது 10 கிராம், ‘சூடோமோனஸ்’ எடுத்து, விதைகளை புரட்டி, இரண்டு மணி நேரம் வைத்திருந்து, நாற்றாங்காலில் விதைக்க வேண்டும்.
  வயலில், 10 அடி நீளம், 3 அடி அகலம், அரை அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து, பாத்தியின் மேல், 10 செ.மீ., இடைவெளியில் ஆள் காட்டி விரலால் வரிசையாக கீறி, கீறல் மீது, கோலப் பொடியை துாவுவது போல, நேர்த்தி செய்த விதைகளை துாவ வேண்டும்.
  விதைகளை மண் மூடுமாறு கையால் கிளறி, வைக்கோல் போட்டு மூடி, பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரம் தண்ணீர் தெளித்து வந்தால், விதைகள் முளைத்து வரும்.
  10ம் நாளில் வைக்கோலை நீக்கி விடலாம். 40 நாட்களில் நாற்றை பறித்து, நடவு செய்யலாம்.நடவு செய்த, மூன்றாம் நாளும், தொடர்ந்து வாரம் ஒருமுறையும், பாசனம் செய்தால் போதுமானது.
  சொட்டு நீர் பாசனம் செய்தால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம்.நடவு செய்த, 20ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை, 1 லி., தண்ணீருக்கு, 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்த கரைசலை, கடைசி அறுவடை வரை தெளித்தால், தண்டு மற்றும் காய் துளைப்பான் புழுக்களை தடுக்கலாம்.
  28ம் நாள் முதல் பூக்க துவங்கி, 50ம் நாளில், 100 சதவீதம் பூத்து விடும்.புள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டுகளை, 1 ஏக்கருக்கு, 12 கிலோ அடுப்பு சாம்பலை மணலோடு கலந்து, இலைகளில் துாவி அழிக்கலாம்.
  மேலும், கத்திரியை தாக்கும் பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சியை, 40 மில்லி மீன் அமிலோ அமிலத்தை, 1 லி., தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  நடவுக்கு முன் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை, தொழுவுரத்துடன் கலந்து மண்ணில் போட்டால், வாடல் நோய் வராது.
  முதல் அறுவடையை, 50 – 60 நாட்களில் செய்யலாம்.
  பயிர் சுழற்சி முறையை கடைபிடிப்பதும், மிக அவசியம். ஒருமுறை கத்தரி போட்டு அறுவடை முடிந்த வயலில், அடுத்ததாக வேறு பயிரை நடவு செய்ய வேண்டும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This