புதுவை துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கீடு.கேள்விக்குறியாகுமா மீனவர் வாழ்வாதாரம்?

Forums Communities Fishermen புதுவை துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கீடு.கேள்விக்குறியாகுமா மீனவர் வாழ்வாதாரம்?

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12349
  Inmathi Staff
  Moderator

  புதுச்சேரியில்   உள்ள   வர்த்தக   துறைமுகத்தை   ஆழப்படுத்த   சாகர்   மாலா   திட்டத்தின்  கீழ்   மத்திய   அரசு   ரூ. 40  கோடி   நிதி   ஒதுக்கீடு   செய்து   அத்திட்டத்திற்கான   சுற்றுசூழல்   தாக்கங்கள்   குறித்து   அறிக்கை   தயாரிப்பு   பணி   முடிவடைய   6  மாத   காலம்   ஆகும்   என்பதால்  அதுவரை  அதே   முகத்துவாரம்   வழியாக   கடலுக்கு   சென்று    வர வேண்டிய   மீன்பிடி   படகுகள்   கடலுக்கு   மீன்   பிடிக்க   சென்று   வர  இயலுமா,   மீனவர்களின்   வாழ்வாதாரம்   பாதிக்குமா   என்று   கேள்வி  எழுந்துள்ளது.

  புதுச்சேரியில்  பல  ஆண்டுகளாக  செயல்படாமல்  கிடக்கும்  சிறு வர்த்தக  துறைமுகத்தை  சென்னையில்  உள்ள  காமராஜ்  வர்த்தக  துறைமுகத்தின்   துணைத்துறைமுகமாக   செயல்படுத்த   முடிவெடுக்கப்பட்டு   புதுச்சேரி  அரசும்,  மத்திய  கப்பல்  போக்குவரத்து  அமைச்சகமும்  ஒப்பந்தம்   செய்து   கொண்டுள்ளனர்.

  இதன்   அடிப்படையில்   சாகர்   மாலா   திட்டத்தின்  கீழ்   மத்திய  கப்பல்  போக்குவரத்து   அமைச்சகம்   ரூ. 40  கோடி   நிதி  ஒதுக்கீடு   செய்துள்ளது.  சென்னையில்   உள்ள   ஐ.ஐ.டி    மூலம்   தயாரிக்கப்பட்ட   விரிவான   திட்ட  அறிக்கை   சமர்ப்பிக்கப்பட்டு  அதன்   அடிப்படையில்   மத்திய   அரசு  நிதி   ஒதுக்கீடு   செய்துள்ளது.

  அதன்  முதல்  கட்ட  பணியாக  தேங்காய்திட்டு  துறைமுக  முகத்துவாரத்தை   தூர்   வாரி   அகலப்படுத்தி   ஆழப்படுத்துவதற்கான   சுற்று  சூழல்   தாக்க   அறிக்கை   தயாரிக்கும்  பணி   சென்னை   ஐ.ஐ.டி   வசம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  பணிகளை   தொடங்குவதற்காக   மத்திய  அரசு   ரூ. 40  கோடியில்  இருந்து  முதல்  கட்டமாக  ரூ. 18 கோடி  நிதியை  புதுச்சேரி  அரசுக்கு  வழங்கியுள்ளது.

  இது தவிர  புதுச்சேரி  கடற்கரையை  மீண்டும்  செயற்கையாக  உருவாக்க  திட்டத்திற்காக  துறைமுக   முகத்துவாரம்  தூர்வாரி  ஆழப்படுத்தும்   பணிக்கு   புதுச்சேரி   ஸ்மார்ட்   சிட்டி   திட்ட   நிதியில்  இருந்து  ரூ.4.5   கோடி   வழங்க   வேண்டும்   என்று   துறைமுகத்துறை   புதுச்சேரி   அரசுக்கு   கோரிக்கை   விடுத்துள்ளது.

  தற்போது   தொடங்கப்படும்   சுற்றுசூழல்   தாக்கி  அறிக்கை  தயாரிக்கும்   பணிக்கான   சர்வே   பணி  முடிவடைய   6  மாத   காலம்   பிடிக்கும்   என்றும்  அதற்கிடையில்   துறைமுகம்   முகத்துவாரம்   ஆழப்படுத்தும்   பணி   போன்ற   பிற   பணிகளை   மேற்கொள்வது   சாத்தியம்  இல்லை  என்றும்  உயர்  அதிகாரி  ஒருவர்  கருத்து  தெரிவித்துள்ளார்.

  தற்போது   தேங்காய்திட்டு   மீன்பிடி   துறைமுகத்திலிருந்து   கடலுக்கு  செல்லும்  முகத்துவாராம்  குறுகலாகி  மண்மேடு  உருவாகியுள்ளதால்   அப்பகுதியில்   ஆழப்படுத்தும்   பணி   தொடங்க   வேண்டியுள்ளது.

  மீன்பிடி   படகுகள்   தடையின்றி   கடலுக்கு   சென்று   வரும் வகையில்   ஏற்பாடு    செய்யவேண்டிய   அவசியம்   உள்ளது.

  சுற்றுசூழல்  தாக்க  அறிக்கை  தயாரிக்க  6  மாத  காலம்  ஆகும்  என்பதாலும்,  அதுவரை  முகத்துவாரத்தை  ஆழப்படுத்தி  அகலப்படுத்திட   இயலாது   என்பதாலும்      அதுவரை     மீன்பிடி    துறைமுகத்திலிருந்து    மீன்பிடி  விசைப்படகுகள்   கடலுக்கு  சென்று  வர  இயலுமா,  மீனவர்களின்  வாழ்வாதாரம்  பாதிக்க  படுமா    என்ற   கேள்வி   எழுந்துள்ளது.

  இக்கேள்விக்கு  புதுச்சேரி  அரசு  தான்  பதிலளிக்க  வேண்டும்  என்று  மீனவ   சமுதாய   தலைவர்   ஒருவர்   தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This