புதுச்சேரி அருகே நல்லவாடு மீனவர் கிராமத்தில் சுனாமி காலங்களில் நிகழ கூடிய மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் மாதிரி உயிர் காக்கும் 3 மணி நேர பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமுகம் புதுச்சேரி மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையும் இணைந்து மீனவர் கிராமத்தில் மீனவ மக்களை விழிப்புணர்வு செய்ய மேற்கண்ட பேரிடர் பயிற்சியை மேற்கொண்டனர்.
சுமத்ரா தீவுக்கு அருகே இந்தோனேஷியாவில் காலை 8:30 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் நல்லவாடு மீனவ கிராமத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹைதராபாத் நகரில் இயங்கும் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் மையம் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் அரக்கோணத்தில் இருந்து வந்த பேரிடர் போக்கும் அதிரடி படையினர் கிராமத்தில் வந்து இறங்கினார்கள்.
அவர்களுடன் புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை துறை, மீன்வளத்துறை, வருவாய் துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை ஆகிய அரசு துறை அதிகாரிகள் ஊழியர்கள், மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமையில் அக்கிராமத்திற்கு வருகை தந்து பேரிடர் போக்கும் பணியில் ஈடுபட்டனர் .
கடலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வீடுகளில் அடைபட்டுக்கிடந்த 200 மீனவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
அருகாமையில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.
சுமார் பகல் 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்ற இந்த மாதிரி பயிற்சி அப்பகுதி மக்கள் பேரிடர் பற்றியும் அப்பொழுது நிகழவேண்டிய பணிகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவியாக இருந்ததாக அப்பகுதி மீனவ மக்கள் தெரிவித்தனர்.