ஆத்தூர் கிச்சலி சம்பா ரக நெல்லின் வயது 135 முதல் 150 நாட்கள். இது கதிர் முற்றிய நிலையில் காற்றடித்தால் கூட சாயாத உறுதித் தன்மையைக் கொண்டது. அனைத்து மண்வகைகளும் இந்த ரகத்துக்கு ஏற்றவை. ஓர் ஏக்கர் பரப்பில் விதைக்க, 10 சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். பாத்தி முழுவதும் விழுமாறு ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து தூவி விட வேண்டும். 3 கிலோ விதைநெல்லுடன் அரை கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து மூன்று நாட்கள் வைத்திருந்து… அதை நாற்றங்காலில் தூவி தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 3-ம் நாளில் இருந்து 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தொடர்ந்து தெளிக்க வேண்டும். 22-ம் நாளுக்கு மேல் எடுத்து வயலில் நடவு செய்யலாம்.
நாற்று தயாராகும்போதே நடவு வயலையும் தயார் செய்து விட வேண்டும். தேர்வு செய்த ஓர் ஏக்கர் நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, ஒரு டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்ப வேண்டும். பிறகு, நிலத்தை சேறாக்கி 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
நாற்று நடவு செய்த 10, 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் 200 லிட்டர் ஜீவாமிர்த கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 30-ம் நாளில் எஞ்சியுள்ள களைகளை ஆட்கள் மூலம் அகற்றி விட்டு… இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஜீவாமிர்தத்தை இலைவழித் தெளிப்பாகவும் கொடுக்கலாம். நெற்கதிர், பால் பிடிக்கும் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 135-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். முற்றிய பிறகு, நிலத்தைக் காயவிட்டு அறுவடை செய்யலாம்.
அனைத்து மண்ணிலும் வளரும் – 150 நாள் வயது
ஏக்கருக்கு 3 கிலோ விதை
ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல்
அரிசியாக விற்றால் கூடுதல் லாபம்