மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க மார்க்ஸிஸ்ட் கட்சி கோரிக்கை

Forums Inmathi News மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க மார்க்ஸிஸ்ட் கட்சி கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12231
  Inmathi Staff
  Moderator

  சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற 15வது நிதிக்குழுவின் கருத்து தெரிவிக்கும் கூட்டத்தில் 15வது நிதி ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகள் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘“இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வளர்ச்சி சார்ந்த அதிகமான பொறுப்புகள் இருப்பதையும் அதற்கான வளங்களை திரட்டுவதில் மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறைவு என்பதையும் கணக்கில் கொண்டு, மொத்தமாக மத்திய அரசு கையில் வந்து சேரும் வரி வருமானத்தில் ஒருபகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று பணித்துள்ளது.இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன.

  1. மத்திய அரசுக்கு வந்துசேருகின்ற மொத்த வரிப்பணத்தை ஒருபுறம் மத்திய அரசுக்கும் மறுபுறம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பகிர்வு செய்யும் பணி.

  2. மாநிலங்களுக்கு என்று இவ்வாறு தரப்படும் வரி வருமானத்தை கோட்பாடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் பணி.

  இவ்விரண்டு பணிகளையும் மேற்கொண்டு பரிந்துரைகளை உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் அமைப்பாக நிதி ஆணையம் என்ற சட்டபூர்வமான ஏற்பாட்டையும் அரசியல் சாசனம் தந்துள்ளது. இந்த நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும். அதன் பணி முடிந்தவுடன் அது கலைக்கப்பட்டுவிடும்.

  மீண்டும் ஐந்தாண்டுகள் முடியும் தருணத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பரிந்துரைகளை உருவாக்க புதிதாக நிதி ஆணையம் அமைக்கப்படும். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை இவ்வாறு பதினான்கு நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த காலத்திற்கான பரிந்துரைகளை அளித்துள்ளன.

  சில மாதங்களுக்கு முன்பு பதினைந்தாவது நிதி ஆணையம் இந்திய குடியரசு தலைவர் ஆணை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்ற வேண்டிய பணிபட்டியல் (Terms of Reference) குடியரசு தலைவரின் ஆணையில் தரப்பட்டுள்ளது.

  விடுதலைக்குப்பின் அமைக்கப்பட்ட அடுத்தடுத்த நிதி ஆணையங்கள் ஒரு கட்டம் வரை அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, மேலே குறிப்பிடப்பட்ட, இரண்டு பணிகளை மட்டுமே செய்யுமாறு பணிக்கப்பட்டன.

  ஆனால் நமது நாட்டில் தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் 1990களில் துவங்கியபின், 11 ஆவது நிதி ஆணையத்தில் துவங்கி, மாநில அரசுகளின் வரவு செலவு பற்றாக்குறை தொடர்பான சிக்கன நெறிமுறைகளையும் அவற்றின் அமலாக்கத்தையும் நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் மத்திய அரசு இணைத்து வருகிறது.

  படிப்படியாக, அடுத்தடுத்து அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களுக்கு அளிக்கப்பட்ட பணிபட்டியல்கள் மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடும் வகையிலும் மத்திய அரசின் நிலைபாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்கும் வகையிலும் அமைந்து வருகின்றன. பதினைந்தாவது நிதி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ள பணிபட்டியல் இந்த பாதையில் மேலும் தீவிரமாக பயணித்துள்ளது.

  பணிபட்டியலின் மீதான முக்கிய விமர்சனங்கள்

  1. கடந்த காலங்களில் நிதி ஆணையங்கள் மாநிலங்களுக்கு உதவிட வருவாய் பற்றாக்குறை மானியங்கள் எந்த அடிப்படையில் அளித்திட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன. இது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 280 (2) (b) அடிப்படையிலான நடவடிக்கை.

  ஆனால் தற்சமயம் பதினைந்தாவது நிதி ஆணையத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பணி பட்டியலின் ஷரத்து 5 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியங்கள் தேவையா? என்று பரிசீலித்திட பணித்துள்ளது. இது அரசியல் சாசனப் பிரிவின் மேற்குறிப்பிட்ட ஷரத்தையே மீறுவதாகும்.

  நடைமுறையில், இம்மானியங்கள் நிறுத்தப்பட்டால் மாநிலங்களின் நிதி ஆதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இந்த ஷரத்து கைவிடப்படவேண்டும். மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியங்கள் அளிக்கப்படுவது தொடர வேண்டும்.

  2. பணி பட்டியலின் ஷரத்து 5 மாநிலங்களின் 2022-23 ஆண்டுக்கான பிஸ்கல் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (GSDP) 1.7சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. இதன் பொருள் மாநிலங்கள் தங்களது செலவுகளை மிகக்கணிசமாக குறைக்கவேண்டும் என்பதாகும். இது மாநிலங்களின் பொருளாதாரங்களை மந்தநிலைக்கு தள்ளிவிடும்.

  இந்தியப்பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும்பொழுது மாநில அரசுகள் தங்கள் செலவை கணிசமாக குறைத்துக்கொள்வது நிலைமையை மேலும் மோசமாக்கும். இப்பரிந்துரை விளக்கி கொள்ளப்படவேண்டும்.

  3. பணிபட்டியலின் ஷரத்து 7 மாநிலங்களுக்கு ஊக்கமளிப்பது (Incentivising) பற்றிக்கூறுகிறது. அதன் உப பிரிவு (Viii) “பாபுலிஸ்ட்” நடவடிக்கைகளை எதிர்க்கிறது. பிரச்சினை என்னவென்றால் ஒரு நடவடிக்கை பாபுலிஸ்டா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டியது நிதி ஆணையம் அல்ல.

  முதியோர் ஓய்வு ஊதியம் அளிப்பது, உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது போன்ற மக்கள் நலன் சார் நடவடிக்கைகள்கூட நிதி ஆணையங்களால் “பாபுலிஸ்ட்” என்று வரையறுக்கப்பட்டு நிராகரிக்கப்படலாம்.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, தான் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகளை நிதி ஆணையம் தீர்மானிப்பதோ நிராகரிப்பதோ பொருத்தமற்றது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே இந்த ஷரத்து நீக்கப்படவேண்டும்.

  மேலும், மேலும் அதிகமான நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டியுள்ளதால் மாநில அரசுகளின் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. மாநில அரசு மக்களுடன் நெருக்கமாக இருப்பதாலும் மக்கள் நல நடவடிக்கைகள் நேரடியாக மக்களுக்கு பயனளிப்பதாலும் இத்தகைய நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

  4. ஊக்கமளித்தல் என்று வரும்பொழுது இன்னொரு பிரச்சினையும் எழுகிறது. தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் கடந்த காலங்களில் பல விஷயங்களில் சிறப்புற செயல்பட்டு சாதித்தவைகளுக்கு ஊக்கமளித்தல் உண்டா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய நடவடிக்கைகளை மட்டும் கணக்கில் கொண்டு கடந்த கால சாதனைகளை ஊக்கமளித்தல் கணக்கில் விட்டுவிடுவதும் பிரச்சினையாகும்.

  எனவே இந்த ஊக்கமளித்தல் என்பதே – அதுவும் அதிகாரிகளைக் கொண்ட நிதி ஆணையம், அதுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையம் ஊக்கமளித்தலின் வரையறைகளை நிர்ணயிப்பது என்பதே பொருத்தமற்றது.

  5. பணிபட்டியலின் ஷரத்து 6 (எ) ஜி எஸ் டி தொடர்பானது. உண்மையில் ஜிஎஸ்டி அமலாக்கம் மாநிலங்களின் வருமானத்தை பாதித்துள்ளது.மத்திய அரசுக்கு சாதகமாகவும் ஒட்டுமொத்தமாக மாநிலங்களுக்கு பாதகமாகவும் உள்ளது. ஐந்தாண்டுகளுக்குப் பின் நட்ட ஈடும் கிடையாது.

  மாநிலங்களின் சொந்த வரி வருமானத்தில் 44 சதமானம் ஜிஎஸ்டிக்குள் வந்துவிட்டது. மத்திய அரசை பொறுத்தவரையில் இந்த சதவிகிதம் 23 சதவிகிதம் தான். Cess மற்றும் Surcharges மூலம் மத்திய அரசு பெரும் வருமானம் அதன் மொத்த வரிவருமானத்தில் 2011-12 இல் 6 சதவிகிதமாக இருந்தது.

  2018-19-ல் 12 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இவை மாநிலங்களுடனான வரி பகிர்மானத்திற்குள் வருவதில்லை. ஜிஎஸ்டி அமைப்பில் Cess மற்றும் Surcharges நீக்கப்பட்டது மத்திய அரசின் வருமானத்தை பாதித்ததாக தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே நிலவும் அசமத்துவமான வருமான நிலைமையை சரிசெய்வதே நிதி ஆணையத்தின் அரசியல் சாசன அடிப்படையிலான பணி.

  இதைத்தான் மேற்கூறியவற்றை கணக்கில் கொண்டு பதினைந்தாவது நிதி ஆணையம் செய்ய வேண்டும்.மொத்த வரி வசூல் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 16.6 சதவிகிதம் என்ற விகிதத்தில் உள்ளது. இந்த வரிவசூல் வகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், மாநிலங்களுக்கிடையில் இந்த வரி வருவாயை பகிர்வது என்ற விசயத்தில் எவ்வித உயர்வும் இன்றி தொடர்ந்து மாற்றமின்றி நீடிக்கிறது.

  மேலும், மத்திய அரசு செஸ், சர்சார்ஜ் மற்றும் டோல் கட்டணம் என்று வேறு பல வடிவங்களிலும் வருவாயைத் திரட்டுகிறது. எனினும் இவை எதுவும் மாநிலங்களுடன் பகிரப்படுவது இல்லை. இந்த வகையில் வசூலிக்கப்படும் வருவாய் அனைத்தையும் மத்திய அரசே வைத்துக் கொள்கிறது. இவ்வாறு மத்திய அரசு அதிக வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தனது கருவூலத்திலேயே வைத்துக் கொள்ளுகிறது.

  செஸ், சர்சார்ஜ் மற்றும் டோல் கட்டணம் மூலம் மத்திய அரசு திரட்டும் வருவாயை இதே விகிதத்தில் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

  6. பணிபட்டியலின் பிரிவு 6 (Vi) அரசியல் சாசனத்தின் 293 (3) பிரிவின்கீழ் மாநிலங்கள் கடன் வாங்குவதன் மீது சில புதிய நிபந்தனைகளை புகுத்துகிறது.. அனைத்து மாநிலங்களும் FRBM சட்டத்தை நிறைவேற்றியுள்ள பின்னணியில் இது முற்றிலும் அனாவசியமான நடவடிக்கையாகும். மாநிலங்களின் கடன் வாங்கும் வாய்ப்புகளை சுருக்குவதாக அமைகின்றது. “கூட்டுறவு அடிப்படையிலான சமஷ்டி” (COOPERATIVE FEDERALISM) என்ற கோட்பாட்டிற்கு இது எதிரானது.

  7. பணிபட்டியலின் சர்ச்சைக்குரிய இன்னொரு அம்சம் தனது பரிந்துரைகளில் நிதி ஆணையம் 2011 மக்கள் தொகை அடிப்படையில் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டிருப்பதாகும். பதினான்காம் ஆணையத்தின் பரிந்துரைகளில் இது பின்பற்றப்பட்டு இருந்தால் தமிழ நாட்டிற்கு கிடைத்ததைவிட பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

  இந்த முறை 15-வது நிதி ஆணையம் 2011 மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு வரிவருமானத்தை பகிர்ந்தளிதால் தமிழ்நாடு கடும் இழப்பை சந்திக்க நேரிடும். இது தமிழ்நாடு உள்ளிட்ட, மக்கள் தொகை வளர்ச்சியை நாட்டின் நலன் கருதி குறைத்துள்ள மாநிலங்களுக்கு நியாயம் வழங்குவதாக இருக்காது.

  எனவே இந்த ஷரத்து பணிபட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு முன்பாக மத்திய அரசுக்கு சாதகமாகவும் ஒட்டுமொத்த மாநிலங்களுக்கு பாதகமானதாகவும் வரிவருமானப்பகிர்வு உள்ளதை முதலில் சரி செய்ய வேண்டும்.

  8. பதினான்காவது நிதி ஆணையம் ஏதோ பகிர்வுக்குட்பட்ட வரிவருமானத்தில் மாநிலங்களின் மொத்த பகிர்வை 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதத்திற்கு உயர்த்தி வாரி வழங்கி விட்டது போலவும் இதனை இந்த முறை சரி செய்யவேண்டும் என்ற பாணியிலும் பணிபட்டியலில் கூறப்பட்டுள்ளது. இது தவறு.

  பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்ற அதே சமயத்தில் வேறுபல மாநிலங்களுக்கு அளித்துவந்த நிதி மானியங்களையும் உதவிகளையும் மத்திய அரசு குறைத்துக் கொண்டுவிட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக தரப்படும் வளங்களின் அளவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக கணக்கிடுகையில் குறைந்துள்ளது என்பதே உண்மை நிலவரம். இது சரி செய்யப்படவேண்டும்.

  தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வருவதாக கூறப்படும் 42 சதவிகித பங்கினை 64 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும். மாநிலங்களுக்கு அதிகமான பங்கு தர வேண்டியுள்ள நிலையில் இதனால் துண்டு விழும் தொகையை மத்திய அரசு வேறு வகைகளில் திரட்டிட வழிகாண வேண்டும்.

  9. மேற்கூறிய ஆலோசனைகளின் அடிப்படையில் பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பணிபட்டியல் திருத்தி அமைக்கப்படவேண்டும்.

  திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு விட்ட நிலையில், திட்டமிட்ட செலவினங்களுக்கு நிதி ஒதுக்கிட வேண்டிய நிலையில்லாததால் மாநிலங்களுடன் இவ்வாறு நிதியை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசுக்கு எவ்வித சிரமம் இருக்காது.

  10 ஈட்டப்படும் வருவாயின் அடிப்படையில் அல்லாமல் செலவின அடிப்படையில் தனது வரிவருவாயை மத்திய அரசு அதிகரித்துக் கொண்டே செல்லும் போக்கு நிலவுகிறது. செலவின அடிப்படையில் வரி விதிக்கப்படுவதால், ஏழைகள் தங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை கூட நுகர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

  மேலும் அவர்களுக்கு கிடைக்கும் குறைந்த வருமானமும் கூட இத்தகைய வரிகளால் பறிக்கப்படுகின்றன. வருவமான வரி, கம்பெனி வரி போன்ற நேரடியாக வரி செலுத்தும் திறனின் அடிப்படையிலான வரிகள் விதிக்கப்படுவதால் இத்தகைய வரிகளே, அரசின் வரிவருவாயில் அதிகமானதாக இருக்க வேண்டும்.

  எனவே மத்திய அரசு இத்தகைய வரிகளை திறமையோடும் சிறிதும் கசிவில்லாமலும் வசூலித்திட சிறந்த வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய வரி ஏய்ப்போர் மீது விதிக்கப்படும் அபராதமும் கூட கடுமையானதாகவும் காலதாமதமற்றதாகவும் இருக்க வேண்டும்.

  அதிக வருவாயைப் பெற்றுத் தரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த பங்கும், குறைந்த வருவாயைப் பெற்றுத் தரும் மாநிலங்களுக்கு சமமான அளவில் பகிர்ந்தளிப்பது என்ற பெயரில் அதிக பங்குகள் வழங்கப்படுகிறது.

  பொதுவாக இந்த கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற போதிலும், மத்திய அரசு அதிக வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களுக்கு ஊறுவிளைவிக்காமல் நலிந்த மாநிலங்களுக்கு உதவி செய்ய வேறு வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

  11. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தொகைகள் கணிசமாக உள்ளன. பட்டியல் இன மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் உள்ளிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாக்கி உள்ளன. தமிழ்நாடு வார்தா புயல், ஓக்கி புயல், கடும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பொழுது மத்திய அரசு அளித்துள்ள நிவாரணத் தொகைகள் மிகவும் சொற்பமே.

  பதினைந்தாம் நிதி ஆணையம் இயற்கை சீற்றங்களாலும் பேரழிவு நிகழ்வுகளாலும் பாதிக்கப்படும் பொழுது நியாயமான நிவாரணத்தொகையை மத்திய அரசு அளித்திடும் வகையில் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

  12. கோட்பாடு ரீதியாக, நிதி மற்றும் அதிகாரப்பங்கீட்டில் மையப்படுத்தும் தன்மை நிராகரிக்கப்பட்டு, அதிகாரங்களும் நிதி பகிர்வும் பரவலாக்கப்படவேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த நிதி ஆணையம் பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த நிதிகள் மாநில அரசுகள் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்பதும் கணக்கில் கொள்ளப்படவேண்டும்.

  மேலும் இதற்கான நிதிகள் பிரதானமாக மத்திய அரசின் வருமானத்தில் இருந்து அளிக்கப்படவேண்டும்.” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This