தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டம், திருச்செந்தூர் ஜீவாநகரில் நடந்தது. சங்க தலைவர் கயஸ் தலைமை தாங்கினார். ஜீவா நகர் மீனவர் கமிட்டி தலைவர் பிச்சையா முன்னிலை வகித்தார். இதில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கிராம பாரம்பரிய மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யாத விசைப்படகுகள், சட்ட விரோதமாக மீன்பிடிப்பதால் பாரம்பரிய மீனவர்களின் பல கோடி மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்து, சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. சட்டப்படி அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் தான் பதிவு செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட அனைத்து பாரம்பரிய மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் புறக்கணித்து, தங்களின் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி, அந்தந்த கிராமங்களில் மீன்பிடி சட்டங்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.