தமிழகத்தில் முட்டைக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட உறுதியை ஏற்று வழக்கை முடித்து வைத்தது. முன்னதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதால் விலையை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை என்றும், நெல், கரும்பு உள்ளிட்டவற்றைப் போன்று முட்டைக்கும் அரசு விலை நிர்ணயிக்க உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது. ஏழை, எளியவர்கள் வாங்கும் வகையில் விலையை நிர்ணயிக்கவும் இது தொடர்பாக தமிழக அரசிடம் கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.