நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்புகளில் ஒன்றான கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பின் இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமையில், குறும்பனை பெர்லின் உள்பட பலர் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
கேரள மாநிலம் முனம்பம் பகுதியில் இருந்து கடந்த 6–ந் தேதி ஓசானிக் என்ற விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரும், வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரும் மீன்பிடிக்க சென்றார்கள். மறுநாளான 7–ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு அவர்களது விசைப்படகு மீது கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் ராமன்துறையை சேர்ந்த பாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 பேர் இறந்தனர். இவர்களது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் 11–ந் தேதி கிடைத்தது. ராமன்துறையை சேர்ந்த சேசுபாலனின் உடல் 13–ந் தேதி கிடைக்கப் பெற்றது. மேலும் ராமன்துறையை சேர்ந்த எட்வின், வடமாநிலத்தை சேர்ந்த நரேன் ஆகியோர் உயிரோடு மீட்கப்பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ராமன்துறையை சேர்ந்த ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், ஷாலு, முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ், கீழமணக்குடியை சேர்ந்த பால்சன் மரியராஜ், அருள்குமார் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மாயமான 7 பேரின் உடல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே மேற்கூறிய குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றன.
இவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு, ஒகி புயலால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக உடனே அறிவித்ததுபோல், இந்த விபத்திலும் மாயமான 7 மீனவர்களையும், இறந்தவர்களாக அறிவித்து அனைவருக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரண தொகையும், அவரவர் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.