பயணிகளின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏதுவாக அரசு பேருந்துகளை நவீனமாக்க கோரி பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜவஹர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நடப்பு நிதியாண்டில் 2 ஆயிரம் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 515 பேருந்துகள் மட்டுமே புதிதாக விடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் ஓட்டுனரின் இருக்கை முதல், அதிர்வுகளை தாங்கும் பட்டைகள் வரை தரமில்லாமல் இருப்பதோடு, முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிகுமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, அரசுக்கு நிதி கிடைக்கும் போது புதிய பேருந்துகள் விடப்படுவதாக கருத்து தெரிவித்தனர். விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, மனுதாரர் ஜவஹர் சண்முகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.