தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தலுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”கருணாநிதி மறைவின் போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நடந்துகொண்டது அதிமுக. கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று உடல் நல்லடக்கத்தின் போது தமிழக அரசின் சார்பாக நான் சென்று அஞ்சலி செலுத்தினேன்.
அரசியல் பண்பாடு பேணிக் காக்கப்பட வேண்டும். எல்லோராலும் அரசியல் பண்பாடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற நியதியில், நாங்கள் முடிந்தவரை அதனை கடைபிடித்திருக்கிறோம். ஆனால், திமுக அரசியல் பண்பாட்டைக் கடைபிடிக்கவில்லை” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.