விசைப்படகுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சங்க தலைவர் கயாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தூத்துக்குடி விசைப்படகுகள் பல பதிவுசெய்யப்படாமல், மீன்பிடி உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் பல கோடி மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்.
ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விசைப்படகுகளை பதிவு செய்யாமல் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை எதிர்த்தும், விசைப்படகுகளை காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரையில் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியும் எங்கள் பகுதியில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.