புண்களை  குணமாக்க   இறால்  மீன்களிலிருந்து   மருந்து  தயாரிப்பு

Forums Inmathi News புண்களை  குணமாக்க   இறால்  மீன்களிலிருந்து   மருந்து  தயாரிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11603
  Kalyanaraman M
  Keymaster

  இறால், மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தை கொண்டு  காயங்களையும் புண்களையும் ஆற்ற முடியும் என்பதை கண்டுபிடித்து அந்த  சிகிச்சையை  இந்தியாவில்   முதன்முறையாக தொடங்கி வைத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி , மற்றும்  மருத்துவ ஆராய்ச்சி  நிறுவனம்    சாதனை  புரிந்துள்ளது.

  ” புண்கள் குணமாக்குதலில் தற்போதைய  நிலை  2018″ என்ற பெயரில்  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி  மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் இறாலில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் மூலம் தீக்காயங்கள், நீரிழிவு, நோயாளிகளின் கால் புண்கள்,  படுக்கையில் ஏற்படும் முதுகுப்புண்கள், நோய்த்தொற்று, மற்றும் அறுவைசிகிச்சை காயங்கள் போன்ற  நாட்பட்ட   புண்களைக்கூட இறால், மீனில் இருந்து எடுக்கப்படும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் மூலம் குணமாக்க முடியும் என்று  ஜிப்மர் மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் எஸ்.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

  ஜிப்மர் கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை துறை மற்றும் தொடர்  மருத்துவ கல்வித்துறை ஆகியவை இந்த சிகிச்சையை  முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

  இது போன்ற மருத்துவ சிகிச்சை,  உரிய  உரிமத்துடனான  தொழில்நுட்பம் அமெரிக்காவில் ஏற்கனவே  செயல்பாட்டில்  இருப்பதாகவும்  இந்தியாவில்  முதன்முறையாக  இந்த சிகிச்சை முறையை  ஜிப்மர் மேற்கொண்டுள்ளதாகவும்  ஜிப்மர் இயக்குனர் டாக்டர்  எஸ். விவேகானந்தன்  தெரிவித்துள்ளார்.

  ஜிப்மர் மருத்துவ கல்லூரி  தொலைதூர மருத்துவத்தின்  தென் இந்திய ஆதார மையமாக திகழ்வதால்  தென்னிந்தியாவில்  உள்ள 160 மருத்துவ கல்லூரிகளுக்கு  இந்த கருத்தரங்கத்தின்  நடவடிக்கைகள்  நேரலையாக ஒளிபரப்பு    செய்யப்பட்டது.

  பிளாஸ்டிக்  சர்ஜரி துறையை சேர்ந்த  டாக்டர்  ஜி .மனோகரன், டாக்டர் ராஜ்மோகன் , ஆகியோர்  சென்னையிலிருந்து சிறப்பு விருந்தினராக  பங்கேற்று  உரையாற்றினார்கள்

  நாள்பட்ட காயங்கள், புண்களை குணப்படுத்துவதில்  இறால், மீன்களிலிருந்து  தயாரிக்கப்பட்ட  மருந்துகள்  எத்தகைய பங்காற்றுகின்றன  என்பது பற்றிய   விவாதங்களை  டாக்டர் மனோகரன், டாக்டர் ராஜ்மோகன் , தொடங்கி வைத்து அந்த மருத்துவத்தின்  பல்வேறு நடைமுறை தன்மைகள் குறித்து  விவாதங்களில்  ஈடுபட்டனர்.

  இந்தியாவில்  முதல் முறையாக  செயல்படுத்தப்பட்டுள்ள  இந்த சிகிச்சை  ஜிப்மரில்  நோயாளிகளுக்கு  இலவசமாக  செய்யப்படுவதாகவும்  விரைவில்  உரிய மருத்துவ  இதழ்களில்  இந்த சிகிச்சை முறை  வெளியிடப்பட்டு  நாடு முழுவதும்  மக்கள் பயனடையும்  வகையில் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படும் என்றும் இக்கருத்தரங்கில்  பங்கேற்ற மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

  இந்திய நாட்டிலேயே மருந்து தயாரிக்க இறால், மீன், உபயோகப்படுமானால்  மீனவர்களுக்கும் அது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய  நற்செய்தியாகவே இருக்கும்  என்று இது குறித்து  கருத்து தெரிவித்த   தேசிய மீனவர் பேரவை தலைவரும், புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏவுமான  மா. இளங்கோ  தெரிவித்தார் .

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This