இருசக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் இனி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் போக்குவரத்து போலீஸார் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 129 மற்றும் அரசாணை எண் 292- 22.02.2007-ன் படி இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
எனினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பது காணப்படுகிறது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஆகிய இருவர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.