சென்னை – வில்லிவாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, குழந்தைகள் காப்பகம் ஆகியவை, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரில் செயல்பட்டு வருகின்றன.
15 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் இக்காப்பகத்தில், தாய், தந்தையரை இழந்த, வறுமையில் சிக்கிய 5 வயது முதல் 12 வயது வரை உள்ள 26 சிறுமிகள், 22 சிறுவர்கள் என 48 பேர் தங்கி, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அப்பகுதியில் சட்டவிழிப்புணர்வு முகாம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட நீதிபதிகள், காப்பகத்தில் தங்கி, அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுவர் – சிறுமிகளிடம் பாலியல் தொல்லை தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிறுவர் – சிறுமிகளுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவின்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபா ராணி உள்ளிட்ட அதிகாரிகள், அச்சிறுவர் – சிறுமிகளிடமும், சம்பந்தப்பட்ட காப்பகத்திலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையில், அரசுப் பள்ளியில் படிக்கும் காப்பக சிறுவர்-சிறுமிகள் 4 பேர், ‘கடந்த 5 ஆண்டுகளாக காப்பக காப்பாளர், மேலாளர், உதவியாளர் ஆகிய 3 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்’ எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காப்பகத்தில் இருந்த சிறுவர் -சிறுமிகளை அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆவடி அருகே பொத்தூர் பகுதியில் உள்ள இரு தனியார் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source : Polimer News