காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதை விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக காவல் துறையில், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தனது துறையைச் சேர்ந்த ஐ.ஜி மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தமிழக காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காவல்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து, தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இந்தக் குழுவில் கூடுதல் டி.ஜி.பி சு.அருணாசலம், டி.ஐ.ஜி தேன்மொழி, டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் ரமேஷ், ஓய்வு பெற்ற எஸ்.பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெண் எஸ்.பி-ன் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.