கால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை

Forums Communities Farmers கால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11461
  Inmathi Staff
  Moderator

  சோற்றுக்கற்றாழை ஆப்ரிக்கா கண்டத்தினை தாயகமாக கொண்டது. எகிப்திய மக்கள் பழங்காலத்தில் இந்த அரிய மூலிகையை தீக்காயம், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர். கற்றாழை வெப்ப மண்டல செடியாகும். ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். வேரோடு பிடுங்கி அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டாலும் ஏழு ஆண்டு வரை உயிர் வாழக்கூடிய அரிய வகை மூலிகை.

  வைட்டமின் ஏராளம்

  விலங்கினங்களுக்கு தேவையான 20 தாதுக்கள் கற்றாழையில் இருக்கிறது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் ‘இ’ பொதிந்து கிடக்கிறது. கற்றாழை இலையின் உட்புறத்தில் உள்ள ஜெல் அற்புதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை ஜெல் மிக அதிகளவு உபயோகமாகிறது.

  கால்நடை வளர்ப்பிலும், சில நோய்களை குணப்படுத்த சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோய், கோழிகளில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் மற்றும் ரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றில் கற்றாழை மிக பயனாகிறது.

  கால்நடைகளின் மருந்து

  கறவை மாடுகளில் மடி வீக்கம் ஏற்பட்டு பால் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் மடியில் ஏற்படும் வீக்கம் சோற்றுக் கற்றாழையால் குறையும். சோற்றுக் கற்றாழையின் ஜெல் உடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து மடியில் தடவும் பொழுது,வீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.

  இதற்காக சோற்றுக் கற்றாழையின் சோறு எனப்படும் ஜெல்லை பெற ஒரு பெரிய மடல் அல்லது இரண்டு சிறிய மடல்களை எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் மஞ்சள் 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம் சேர்த்து மிக்சியில் 150 மில்லி தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்பசையை பாதிக்கப்பட்ட மடியில் தடவ வேண்டும்.

  அதற்கு முன்னால் பாதிக்கப்பட்ட காம்புகளிலிருந்து பாலை முழுவதுமாக கறப்பது முக்கியமானதாகும். சோற்றுக் கற்றாழைக் கலவையை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை மடியில் தடவினால் நல்லது. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்தால் பலன் கிடைக்கும். ஒரு நாளுக்கு தேவையான கலவையை மொத்தமாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளக்கூடாது.

  ஒவ்வொரு முறையையும் கலவையை புதிதாக தயார் செய்வதே நல்லது. கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஏற்படும் பொழுது அதனால் உண்டாகும் இறப்பை கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை, மஞ்சள், சிறிதளவு புளியம்பழம் சேர்த்து அரைத்து அரிசி குருணையுடன் கலந்து கொடுக்கலாம்.

  ரத்தக் கழிச்சல் நோய்க்கு சோற்றுக் கற்றாழை மடல் ஒன்று, காப்புக்கட்டு செடி ஒரு கையளவு, இலந்தை மரத்தின் இலை ஒரு கையளவு, நாவல் மரத்தின் கொழுந்து இலை ஒரு கையளவு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து தர வேண்டும்.

  இதை ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் அசையும் இரைப்பையில் உண்டாகும் இறுக்கம் ஆகியவற்றுக்கும் சோற்று கற்றாழையை கொடுக்கலாம்.

  ஒரு கற்றாழை மடலின் கூழோடு, இரண்டு கையளவு குப்பை மேனி இலையையும் சேர்த்து அரைத்து கொடுத்தால் நோய் குணமாகும். மேலும் தோல் நோய்கள், குடற்ப்புழு நீக்கத்திலும், உண்ணி, பேன் நீக்கம் போன்ற மருத்துவத்திலும் சோற்றுக் கற்றாழை கால்நடைகளுக்கு மருந்தாக உதவுகிறது.

  – டாக்டர் வி.ராஜேந்திரன்
  முன்னாள் இணை இயக்குனர்
  கால்நடை பராமரிப்புத்துறை
  9486469044

  நன்றி: தினமலர்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This