கடல் உணவு மற்றும் அதுசார்ந்த தொழில் நுட்ப சர்வதேச கண்காட்சியைக் காண மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஜப்பான் சென்றார். அவருடன் மீன் வளத்துறை செயலாளர் டாக்டர் கெ.கோபால் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.சமிராம், மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு 22,23,24 ஆகிய மூன்று நாள்களும் நடக்கும் கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசுமுறைப்பயணமாக, இந்த சுற்றுப்பயணத்தை துவங்கும் முன், சென்னை ஏர்போர்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த பொருட்காட்சியில் பங்கேற்பதன் மூலம், கடல் உணவு மற்றும் அதன் தொழில் நுட்பம் சார்ந்த பல சர்வதேச தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களை சந்திக்க இயலும். புதிய தொழில் நுட்பங்களை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சி எடுப்போம். ஜனவரி மாதம் தமிழ் நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களை அழைக்க இருக்கிறோம். இதன் மூலம் மீன் பிடித் தொழில், மீன் பதப்படுத்தல் தொழில் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியில் பல புதிய உத்திகளை கொண்டு வர முடியும் என கருதுகிறோம் எனக் கூறினார்.