கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3000 வீதம் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிணறாயி விஜயன், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு ரூ.3000 வீதமும், கூடுதலாக எரிபொருள் செலவும் வழங்கப்படும் எனக் கூறினார். அதோடு, மீட்புப் பணிகளின் போது, படகுகள் சேதமுற்றிருந்தால் அவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், செய்தியாளர்களிடம், மீனவர்கள் கேரளியர்களின் சிறந்த மீட்புப் படையினர் என்றும் வர்ணித்தார்.
மழை வெள்ளத்தில் சிக்கிய 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கேரளமீனவர்கள் இரவு பகல் பாராது மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மீனவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் கேரள அரசின் இந்த முடிவை தேசிய மீனவர் பேரவையின் தலைவரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏவுமான மா. இளங்கோ வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், ஏற்கனவே, தங்கள் குடும்பத்தினர் மழை மற்றும் கடல் சீற்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு மக்களை மீட்ட மீனவர்களுக்கு இது கைத்தாங்கலான பேருதவி என்றும், பலனை எதிர்பாராது சேவை செய்த மீனவர்களை கேரள அரசு நல்ல முறையில் கௌரவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.