குமரி மாவட்டம் இனயம் புத்தன்துறையை சேர்ந்தவர்கள் சுனில் ( 32), டக்ளஸ் (28). மீனவர்களான இருவரும் அண்ணன், தம்பி. இவர்களுக்கு சொந்தமான படகை தேங்காப்பட்டணம் பொழிமுக பகுதியில் நிறுத்தியிருப்பது வழக்கம். கடந்த 14-ந் தேதி குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் தேங்காப்பட்டணம் கடலில் வீணாக சென்று கலந்தது.
இதனால் பொழிமுக பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அறிந்த சுனில், டக்ளஸ் ஆகிய இருவரும், மழை வெள்ளம் தங்களுடைய படகை இழுத்து சென்று விடுமோ என்ற அச்சத்தில் ஓடி வந்தனர். பின்னர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே படகை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் இருவரையும் மழை வெள்ளம் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது.
இதனால் அண்ணன், தம்பியை மீட்க சக மீனவர்கள் அந்த பகுதியில் தேடினர். அவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இருவரின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் தேங்காப்பட்டணம் கடல் அலை தடுப்புச் சுவரின் இடையில் சிக்கி பிணமான நிலையில் டக்ளஸ் உடலை சக மீனவர்களும், போலீசாரும் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மழை வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டு டக்ளஸ் பலியானது தெரிய வந்தது. அவரது அண்ணன் கதி என்னவென்றும் இதுவரை தெரியவில்லை.