கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தடையை மீறி சுருக்கு வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துறைமுக பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 37 மீனவர் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு, காவல்துறை தடை விதித்திருந்த போதிலும் அதனை மீறி அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன பேரணியாக கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக 37 மீனவ கிராமத்தில் யாரும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.கண்டன ஊர்வலம் மற்றும் போராட்டத்திற்கு சோனங்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சலங்கார கிராமம், தைக்கால்தோணித்துறை கிராம பஞ்சாயத்தார் முன்னிலை வகித்தனர். சாமியார்பேட்டை, வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் வரவேற்றனர். 37 மீனவர் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசினர்.