விசைப்படகு மீது மோதிய கப்பல் எம்.வி தேச சக்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கப்பல் கேப்டன், 2 பணியாளர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் கப்பலின் கேப்டன் மீது இதுவரை வழக்குபதிவு செய்யப்படவில்லை எனவும், கப்பலை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. கப்பலில் மோதியதாக கருதப்படும் ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் கப்பல் மங்களூரு துறைமுக பகுதியில் நிறுத்திவிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றி வர சென்னையில் இருந்து ஈரான் செல்லும் வழியில் கப்பல் விசைப்படகு மீது மோதியுள்ளது. இருப்பினும் முதலில் கப்பல் நிற்காமல் சென்றது. ஷிப்பிங் டைரக்டர் ஜெனரல் அளித்த தகவலை தொடர்ந்து கப்பல் மங்களூரு துறைமுகத்தில் நிறுத்திவிடப்பட்டிருந்தது. பின்னர் புது மங்களூரு துறைமுக பகுதிக்கு கொண்டுவரப்பட்ட கப்பலின் மேல் பாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. இந்தநிலையில் மும்பையில் இருந்து அழைத்துவரப்பட்ட நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் கப்பலின் அடிப் பகுதியில் சென்று ஞாயிற்றுகிழமை முதல் சோதனை நடத்தப்பட்டு வந்தது.இது தொடர்பாக வீடியோ பதிவுகளும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் விசைப்படகு மீது கப்பல் மோதியதற்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசைப்படகு மீது மோதியது ‘எம்.வி தேச சக்தி’ என்ற கப்பல்தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மங்களூருவில் முகாமிட்டிருந்த மட்டாஞ்சேரி போலீசார் கப்பல் கேப்டன் மற்றும் சம்பவத்தின்போது பணியில் இருந்த 2 பணியாளர்கள் என்று மூன்று பேரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் இன்று காலையில் கொச்சி அழைத்துவரப்பட உள்ளனர். விசாரணை முடிவில் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
source : Mathrubumi News