Forums › Communities › Farmers › உவர் மண்ணுக்கு ஏற்ற ‘கள்ளிமடையான்’ களர் நெல்
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 5 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
August 16, 2018 at 4:46 pm #11081
Inmathi Staff
Moderatorவெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம், மேட்டு நிலத்துக்கான ரகம், பள்ளப்பகுதிக்கான ரகம், களர் மண்ணுக்கான ரகம், உவர் மண்ணுக்கான ரகம் எனப் பல வகைப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வந்துள்ளனர் நம் முன்னோர்.
அதனால்தான், நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் என ஏதுமில்லாத சூழ்நிலையிலும்கூடத் தற்சார்பாக விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இன்று பாரம்பர்ய ரகங்களையும் கால்நடைகளையும் கைவிட்டதால், பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றும் வகையில் இயற்கை விவசாயிகள் பலரும் பாரம்பர்ய ரகங்களைத் தேடிப்பிடித்து அவற்றைப் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்.
கடந்த 10.1.18-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம் தரும் இயற்கை சம்பங்கி’ என்ற தலைப்பில் வெளியான செய்தி மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர்தான் ஆறுமுகம். இவர், ‘கள்ளிமடையான்’ என்ற பாரம்பர்ய ரக நெல்லைச் சாகுபடி செய்து பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அறுவடை செய்த நெல்லைக் களத்தில் கொட்டிப் பரப்பிக் கொண்டிருந்த ஆறுமுகத்தைச் சந்தித்தோம். “பெரம்பலூர் சுற்று வட்டாரப்பகுதிகள்ல கள்ளிமடையான், களரன் சம்பா, மூங்கில் சம்பா, சன்னச் சம்பா, சடைச்சம்பா, கார்த்திகைச்சம்பானு கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்கள் இருந்துச்சு.
இதுல முதன்மையானது கள்ளிமடையான் ரகம்தான். உவர் மண்ணுக்கும், களர் மண்ணுக்கும் ஏத்த ரகம் இது. முன்னாடி 1983-ம் வருஷம் இந்த நெல்லைச் சாகுபடி செஞ்சுருக்கேன். இடையில சில வருஷங்கள் விவசாயத்தை விட்டுட்டு வேற தொழில் செய்யப் போயிட்டேன்.
அப்புறம் பசுமை விகடன் ஏற்படுத்துன தாக்கத்தால 2010-ம் வருஷத்துல இருந்து இயற்கை முறையில பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். அப்போதிருந்தே கள்ளி மடையான் ரக நெல்லைத் தேடிட்டுருந்தேன். சமீபத்துல தான் இந்த ரக விதைநெல் கிடைச்சது.
‘வடக்கு மாதவி’ங்கிற கிராமத்தைச் சேர்ந்த செல்வக் குமார்ங்கிறவர்தான் 3 கிலோ விதைநெல் வெச்சுருந்தார். அவர்கிட்ட இருமடங்கா திருப்பித் தர்றேன்னு சொல்லி விதைநெல்லை வாங்கிட்டு வந்தேன்” என்ற ஆறுமுகம், கள்ளிமடையான் ரகத்தின் குணங்கள் குறித்து விவரித்தார்.
“இது சம்பாப்பட்டத்துக்கு ஏத்த மோட்டா ரகம். எருவையும், இலைதழைகளையும் போட்டே நல்ல விளைச்சல் எடுத்துவிட முடியும். பூச்சித்தாக்குதல் இருக்காது. இதுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகம். ஒரு ஏக்கர் நிலத்துல 2 டன் வரை நெல் மகசூல் கிடைக்கும். இது 150 நாள் வயசு கொண்டது. அஞ்சரையடி உயரத்துக்குச் பயிர் வளரும். தாள் நல்லா திடகாத்திரமா இருக்கும். நெல்மணிகளும் திரட்சியா இருக்கும். இட்லி, தோசை, புட்டு, பொங்கல் சமைப்பதற்கு இந்த அரிசி நல்லா இருக்கும். நாங்க சோறு சமைக்க பயன்படுத்தி இருக்கோம்” என்ற ஆறுமுகம் நிறைவாக,
“30 சென்ட் நிலத்துல சாகுபடி செஞ்சதுல, 700 கிலோ மகசூல் கிடைச்சிருக்கு. இதுல 200 கிலோவை வீட்டுத்தேவைக்கு வெச்சுக்கிட்டு மீதியை, விதைநெல்லாவே விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இரு மடங்காகத் திருப்பித் தரப் பிரியப்படுற பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு விலையில்லாம கொடுக்கலாம்னு இருக்கேன். பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஏத்த ரகமான இதைப் பரப்பணுங்கிறதுதான் என் ஆசை” என்று சொல்லி விடைகொடுத்தார்.
நன்றி: பசுமை விகடன்
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.