குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்தவர் ஏசுபாலன். இவருடன், 14 மீனவர்கள் விசைப்படகில், கடந்த 6-ந் தேதி கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது.
இதில் விசைப்படகு முற்றிலும் சேதம் அடைந்தது. படகில் இருந்த 14 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள மீனவர்களை தேடும் பணி நடந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் முனம்பம் பகுதியை சேர்ந்த சிவன் என்பவரது உடல் மீட்கப்பட்டது. இந்தநிலையில், ஏசுபாலனின் உடல் மீனவர்கள் வலையில் சிக்கியது. ஏசுபாலனின் உடலை, முனம்பம் போலீசார் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஏசுபாலனின் சகோதரர்கள் ராஜேஷ்குமார், ஆரோக்கியதினேஷ் ஆகியோரும் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.