ஆடிப்பட்டம் தேடி விதை! – விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

Forums Communities Farmers ஆடிப்பட்டம் தேடி விதை! – விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10942
  Inmathi Staff
  Moderator

  தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை’ (TANSEDA) மூலமாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வேளாண் வட்டாரங்களிலும்… நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகிய பயிர்களின் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

  இதுகுறித்து, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். “தமிழ்நாடு முழுவதுமுள்ள 385 வேளாண் வட்டாரங்களில் (பிளாக்), 850 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளுக்காக 50% முதல் 60% வரை மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் விதைகள் இந்த மையங்களில் மானிய விலையில் கிடைக்கும். அந்தந்தப் பகுதியில் என்னென்ன பயிர்கள் அதிகம் விளையுமோ அந்தப் பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப் பயிர்களோடு மற்ற விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையங்களில் சிறு மற்றும் குறு விவசாயிகள் (5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்கள்) மட்டுமே மானிய விலையில் விதைகளை வாங்க முடியும். மற்ற விவசாயிகள் முழுவிலையில் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.

  பல தனியார் கடைகளில் விதைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கத்துக்காகவே, இந்த விதை விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று நீடித்த நிலைத்த மானாவாரி திட்டம், விதைக்கிராமத் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் பயனடைபவர்களும் விதைகளை, மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும்.

  ஆடிப்பட்டம் விதைப்புக்கேற்ற பருவம். அதிக மழை பெய்து நீர்வளம் நிறைந்திருக்கும் பகுதிகளில் நெல் போன்ற பயிர்களை விதைக்கலாம். மழை குறைவாகக் கிடைத்திருக்கும் பகுதிகள், மானாவாரி நிலங்கள் ஆகியவற்றில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களைப் பயிரிடலாம். அதற்கேற்றவாறு விதைகளை இருப்பு வைக்க வேளாண் வட்டார அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். விதை வாங்க விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வேளாண் வட்டார அலுவலகத்தை அணுகி விதைகளை வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

  தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் (டான்சிடா) மீனாக்குமரியிடம் பேசினோம். “வேளாண் வட்டார விதை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதைகளும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி ரகங்கள்தான். அவற்றிலும் நல்ல மகசூல் கொடுக்கக்கூடிய விதைகளைத்தான் விற்பனை செய்கிறோம். இந்த மையங்களில் விற்கப்படும் விதைகள், விவசாயிகளால் உற்பத்தி செய்து, விதைச் சான்றளிப்புத் துறையின் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட சான்றுவிதைகள்தான். அதனால், தரத்தைப் பற்றி விவசாயிகள் கவலைப்பட வேண்டியதில்லை. விவசாயிகள் தங்களின் தேவையைப் பொறுத்து விதைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

  பொதுவாக, நெல் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும். திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் வித்துகள் நன்றாக விளையக்கூடிய சீதோஷ்ண நிலை இருப்பதால், அம்மாவட்டங்களில் எண்ணெய் வித்து விதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களில் பருத்திக்கும்; தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மாவட்டங்களில் துவரை உள்ளிட்ட பயறு வகைகளுக்கும்; நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றுக்கும்; டெல்டா மாவட்டங்களில் நெல் மற்றும் உளுந்து ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர மற்ற விதைகளையும் விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம். ஒட்டு ரக விதைகளை அரசு உருவாக்குவதில்லை. அதைத் தனியார் விதை நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. அதனால் அவ்வகை விதைகளுக்குப் ‘பின்னேற்பு மானியம்’தான் வழங்க முடியும்” என்றார்.

  நன்றி:பசுமை விகடன்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This