வெண்டைக்காய்… மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்!

Forums Communities Farmers வெண்டைக்காய்… மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #10864
    Inmathi Staff
    Moderator

    வெண்டைக்காய்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து, சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் சொல்லியிருந்த தகவல்கள்:

    சொட்டுநீர்ப் பாசனத்தில் வெண்டைக்காய்ச் சாகுபடி செய்யும் விவசாயிகள், நீர் உரத்தொட்டி(வென்ச்சுரி) மூலமாக, அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவைச் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை கொடுக்க வேண்டும். வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் நடவு செய்த 10, 20 மற்றும் 30-ம் நாள்களில்… ஒரு ஹெக்டேருக்கு முந்நூறு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் கொடுக்க வேண்டும். 30 மற்றும் 60-ம் நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு டன் மண்புழு உரம் இடவேண்டும்.

    நடவு செய்த 30 முதல் 35-ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் முதல் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்துவந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத்தொடங்கும்.  பிறகு ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். அதனால், ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம். முறையாகப் பராமரித்தால் ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். சரியாகப் பராமரிக்காத வயலில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறைதான் அறுவடை செய்ய முடியும்.

    வெண்டைக்காயைப் பிஞ்சாக இருக்கும்போது பறிக்கக்கூடாது. அதேபோல முற்றிய காயையும் பறிக்கக்கூடாது. சரியான முதிர்ச்சி அடையாத பிஞ்சுக்காய்களைத் தொடர்ந்து பறித்தால்… 100 நாள்கள் மகசூல் கொடுக்க வேண்டிய பயிர், 80 நாள்களில் தனது மகசூலை நிறுத்திக்கொள்ளும். வெண்டைக்காயின் கொண்டைக்கு மேலே, இரண்டு முதல் மூன்று அங்குல உயரத்தில் இருக்கும் காய்களைப் பறிப்பதுதான் சிறந்தது.

    வெண்டைக்காயைக் குளிர்பதனக்கிடங்கில் வைத்துச் சேமிக்க முடியாது. குளிர்பதனக்கிடங்கில் வைத்தால் வெண்டைக்காய் சுருங்கிவிடும். வேறு வழியே இல்லை, குளிர்பதனக் கிடங்கில் வைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தால்… 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 90 முதல் 95% அளவு காற்றின் ஈரப்பதமும் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். ஏழு டிகிரி செல்சியஸுக்குக் கீழே வெப்பநிலை இருந்தால், வெண்டைக்காய் கறுத்துவிடும்.

    பூச்சிகள்… கவனம்!

    வெண்டைக்காயைத் தாக்கும் பூச்சிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, செந்நாவாய் பூச்சி ஆகியவை முக்கியமானவை. அசுவினித் தாக்குதலுக்கு உள்ளான இலையின் அடிப்பாகம் சுருங்கியதுபோல இருக்கும். விளிம்பு மடங்கத் தொடங்கும். தத்துப்பூச்சித் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறமாக மாறி, பிறகு பழுப்பு(பிரவுன்) நிறத்துக்கு மாறும். இலை, தீயில் வாட்டியதுபோல காணப்படும். இந்த இரண்டு பூச்சிகளையும் தடுக்க 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த 20-ம் நாள் முதல் ஒவ்வொரு 25 நாள் இடைவெளியில்… சாகுபடிக்காலம் முடியும் வரை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும். மஞ்சள் வண்ண அட்டையை வயலில் ஆங்காங்கே கட்டி வைக்க வேண்டும்.

    வெண்டைக்காயைத் தாக்கும் மற்றொரு பூச்சி வெள்ளை ஈ. இது ஒருவகையான வைரஸ் கிருமியைப் பரப்பும். ‘இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய்’ என அதற்குப் பெயர். இந்த நோய் தாக்கப்பட்ட இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிவிடும். வெண்டி விவசாயிகள் அதிகம் சந்திக்கும் பிரச்னை இதுதான். இதனால், அதிகளவில் மகசூல் பாதிப்பு ஏற்படும். இலை மஞ்சள் நரம்பு நோய் தாக்கிய இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. அதனால், செடிகளுக்கு உணவு கிடைக்காது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால், அந்த நோயைப் பரப்பும் ஈயை வேப்பெண்ணெய் கரைசல் மூலம் கட்டுப்படுத்தலாம். இருபது நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து 5 சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படுத்தி வந்தால், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ இவை மூன்றையும் கட்டுப்படுத்தலாம். மேலும், இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய் தாக்காத சில கலப்பின ரகங்களைச் சாகுபடி செய்வதன் மூலமும் இந்த நோயிலிருந்து வெண்டைக்காயைக் காப்பாற்றலாம். செடியில் பூ உருவாகி, காய்கள் தோன்றும் நேரத்தில்தான் இலைகளில் குளோரோஃபில் அளவு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில்தான் வெள்ளை ஈ வருகை இருக்கும். இந்த ஈ, பெரும்பாலும் களைச்செடிகளில்தான் இருக்கும். அதனால், பூவெடுக்கும் நேரத்தில் வயலில் களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியமானது.

    வெண்டைக்காயில் காய்ப்புழுத்தாக்குதலும் இருக்கும். காய்ப்புழுத் தாக்குதலுக்குள்ளான வெண்டைக்காய்கள்… வளைந்து, எட்டுப்போல, அரைவட்டமாக என வடிவம் மாறிக் காணப்படும். காய்களில் துளைகளும் இருக்கும். தாய் அந்துப்பூச்சி, இலையின் குருத்துகள், பூவிலிருந்து முளைக்கும் பிஞ்சுகளில் முட்டைப் போட்டுவிடும்.

    அதிலிருந்து வெளிவரும் புழுக்கள், தண்டின் உள்ளே போய், விதை உருவாகும் இடத்தில் உள்ள சதைகள் மற்றும் விதைகள் முழுவதையும் சாப்பிட்டுவிடும். தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு என அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒரே புழுதான். இனக்கவர்ச்சிப் பொறி மூலமாகத் தாய் அந்துப்பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம். ஒரு ஹெக்டேருக்கு 12 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைக்க வேண்டும். டிரைக்கோகிரம்மா கைலானிக் முட்டை ஒட்டுண்ணியை வயலில் ஆங்காங்கே கட்டி வைக்கலாம். வெண்டைக்காய்ச் சாகுபடி செய்யும் இடங்களில் வரப்புப் பயிர்களாக, மக்காச்சோளம் நடவு செய்தால் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தலாம்.

    நோய்கள்… உஷார்!

    வெண்டைக்காய்ப் பயிருக்கு வரக்கூடிய முக்கிய நோயான, ‘இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய்’ குறித்து ஏற்கெனவே பார்த்துவிட்டோம். வெண்டைக்காயைத் தாக்கும் மற்றொரு நோய், ‘இலைச் சாம்பல் நோய்’. இந்நோய்த் தாக்குதலுக்குள்ளான செடிகளின் இலைகள், வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். குளிர்காலங்களில் இந்நோய்த் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த திரவ வடிவ டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது சூடோமோனஸ் தெளிக்கலாம்.

    இவற்றைத் தவிர்த்து ஒருங்கிணைந்த பூச்சி, நோய் நிர்வாகம் மூலமாக நல்ல மகசூல் எடுக்க முடியும். ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையின் அடிப்படை விதைநேர்த்தி. எனவே விதைநேர்த்தி, நடவுக்கு முன்பாக வேப்பம் பிண்ணாக்கு இடுவது, களை இல்லாத வயல், பூச்சிகளைத் தடுக்கும் வரப்புப் பயிர்கள் சாகுபடி, இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் இலை மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்துதல் போன்றவற்றைக் கடைப் பிடிப்பதன் மூலமாகத் தான் சிறந்த மகசூலை எடுக்க முடியும்.

    தொடர்புக்கு: பேராசிரியர் செந்தூர்குமரன், செல்போன்: 94438 69408.

    நன்றி:பசுமை விகடன்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This