நாட்டுக்கோழிகளுக்கு ஏற்படும் நோய்களும் இயற்கை வைத்தியமும்

Forums Communities Farmers நாட்டுக்கோழிகளுக்கு ஏற்படும் நோய்களும் இயற்கை வைத்தியமும்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10859
  Inmathi Staff
  Moderator

  நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான இயற்கை வைத்தியம்:

  “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால் அது வெள்ளைக்கழிசலுக்கான அறிகுறி. காபி நிறத்தில் கழிந்தால் அது ரத்தக்கழிசலுக்கான அறிகுறி.

  இந்த நோய்கள் நச்சுயிரிகள் மூலமாகப் பரவுகின்றன. தீவனம், தண்ணீர், காற்று மூலமாக நச்சுயிரிகள் கோழிகளைத் தாக்கும். இவற்றைத் தடுக்க ஆங்கில வைத்திய முறையில் சொட்டு மருந்துகள் மற்றும் ஊசி மூலமாகச் செலுத்தும் தடுப்பு மருந்துகள் உள்ளன. கடைகளில் இவற்றை வாங்கி நாமே கோழிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது சனிகிழமைதோறும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பு மருந்துகளைக் குஞ்சுப் பருவத்திலிருந்து அட்டவணைப்படித் தவறாமல் கொடுத்து வர வேண்டும். நாட்டு மருத்துவம் மூலமும் நோய்த் தாக்குதலை விரட்டமுடியும்.

  பண்ணையில் உள்ள பெரிய கோழிகளுக்கு அவ்வப்போது சின்ன வெங்காயத்தை நறுக்கித் தீவனமாகக் கொடுத்து வந்தால், இந்த நோய்கள் தாக்காது. அதையும் மீறித்தாக்கினால் அதற்கும் கைவைத்தியம் உண்டு.

  10 சின்ன வெங்காயம், ஒரு கரண்டி புளிக்காத தயிர், ஒரு தேக்கரண்டி(டீ ஸ்பூன்) சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஐந்து ஈர்க்குக் கிழாநெல்லி ஆகியவற்றை அரைத்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதைக் காலை, மாலை இரண்டு வேளைகளும் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு வாயில் ஊற்றி விடவேண்டும். கோழிகள் குடிக்கும் வரை கொடுக்க வேண்டும். குடிக்க முடியாமல் திமிரும்போது ஊற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்கள் குணமாகும். பன்றி நெய்யைச் (பன்றியின் தோலில் உள்ள கொழுப்பு) சூடான சாதத்தில் கலந்து, பிசைந்து கோழிகளுக்குக் கொடுத்தாலும் வெள்ளைக்கழிசல் நோய் குணமாகும்.

  கோழிகளைத் தாக்கும் மற்றொரு நோய் அம்மை, பெரும்பாலும் நாட்டுக்கோழிகளை அம்மை தாக்காது அப்படியே தாக்கினாலும் வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து உடம்பில் தடவிவந்தால் அம்மை நோய் குணமாகும். சில கோழிகள் வைக்கும் முட்டையில் ஓடுகள் பலமாக இருக்காது. இப்படி இடப்படும் முட்டைகளை ‘தோல் முட்டை’ என்பார்கள். தோல் முட்டை வைக்கும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது என்று கிராமங்களில் சொல்வார்கள். உண்மையில், கால்சியம் பற்றாக்குறையால்தான் கோழிகள் தோல்முட்டை வைக்கின்றன. முட்டை வைக்கும் கோழிகள், கால்சியம் சத்துக்காகத் தாமாகவே சுண்ணாம்புச் சுவரைக் கொத்துவதைப் பார்க்கமுடியும். முட்டையிடும் கோழிகளின் தீவனத்தோடு கிளிஞ்சல் தூளைச் சேர்த்துக் கொடுத்துவந்தால், போதுமான கால்சியம் கோழிகளுக்குக் கிடைக்கும். நிலக்கடலையைத் தூளாக்கிக் கோழிகளுக்கு அவ்வப்போது கொடுத்து வந்தால், உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பதுடன் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளும் கிடைக்கும்.

  கோழிப்பேன்

  கோழிப்பேன் எனப்படும் செல்வகைப்பூச்சிகளால் கோழிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இவை கோழிகளுக்கு அரிப்பை உண்டாக்கும். பெரும்பாலும் அடைக்கோழிகளைத்தான் இது தாக்கும். ஹாலோபிளாக் கற்களால் அமைக்கப்படும் கட்டடத்தில் கோழிகளை அடை வைக்கும் போது, பேன் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே ஹாலோபிளாக் கட்டடங்களைத் தவிர்க்க வேண்டும். பேன் தாக்கிய கோழிகளுக்கு வசம்பைத் தூளாக்கி, அதில் சிறிது சாம்பல் சேர்த்து, வெயில் நேரத்தில் உடம்பு முழுவதும் தேய்த்து, விடவேண்டும். அல்லது சீத்தாப்பழக் கொட்டையைப் பொடியாக்கி, கோழியின் உடம்பு முழுவதும் தேய்த்து விடலாம். எருக்கன் இலைகளின் பின்பக்கத்தில் சிறிது விளக்கெண்ணெய் தடவி, கொட்டகையில் ஆங்காங்கே போட்டு வைத்தால் அதில் செல்கள் ஒட்டிக்கொள்ளும், அந்த இலைகளைச் சேகரித்து எரித்து விட வேண்டும்.

   

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This