கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கான வெள்ள எச்சரிக்கை தொடர்ந்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இதனால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுரங்கம் வழியாக 25 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக ஒரு லட்சம் கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர்வந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்திராநகர், மணிமேகலை தெரு, கலைமகள் தெரு ஆகிய பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய அதிகாரிகள், 4 முகாம்களில் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்க உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர், வெள்ளம் பாதித்த பகுதிகளையும் பார்வையிட்டார்.