சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகக் கடந்த ஆறாம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணியை, சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. மத்திய அரசும் விஜயா கமலேஷ் தஹில்ரமணியை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. இதையடுத்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீதிபதி விஜயா கமலேஷ் தகில்ரமணியைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தார்.
இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.