புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து தினமும் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மணமேல்குடி கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று அதிகாலை திருப்புனவாசல் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, ராஜ்குமார், ஜவகர், போலீசார் பாரதிதாசன், ரெங்கநாதன், பாண்டியன் ஆகியோர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள கடலோர பகுதியில் பைபர் படகில் சிலர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். கடலோர காவல் குழுமத்தினர் அவர்களை நெருங்கியதும், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து கடலோர காவல் குழுமத்தினர் அந்த படகை சோதனை செய்தனர். அதில் 8 மூட்டைகளில் கஞ்சா இருந்ததை அவர்கள் கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 250 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்த கஞ்சா மூட்டைகளை பைபர் படகில் இலங்கைக்கு கடத்த முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது.