அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க மறுத்த சம்பவம்: ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கண்டனம்

Forums Inmathi News அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க மறுத்த சம்பவம்: ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கண்டனம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10577
  Inmathi Staff
  Moderator

  அண்ணா சதுக்கத்தில்  கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு எதிராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மீன் வளத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

  பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயத்தை கடனாக வாங்கி இருப்பதால், அதைத் திருப்பித் தருவதற்காக அண்ணா சமாதி அருகே கலைஞரை நல்லடக்கம் செய்ய வேண்டியது இன்றிமையாதது என்று அண்ணா சதுக்கத்தில் இடம் கேட்டதாகவும், அந்த வேண்டுகோளை ” காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தார்” என்று முக ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் நச்சுக் கருத்து ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளார்.

  மறைந்த முதுபெரும் தமிழக அரசியல் தலைவருக்கு உள்ளார்ந்த மரியாதையுடனும்,அக்கறையுடனும் அதிமுக அரசு செய்த சிறப்புகளை பட்டியலிட்டு காட்டும் நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளிவிட்டார். சொல்லிக் காட்ட வேண்டிய எண்ணம் எங்களுக்கு சிறிதும் இல்லை. பதிவு செய்ய வேண்டியது வரலாற்று கட்டாயம் என்பதால், கலைஞர் அவர்களின் புகழைப் போற்ற தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிடுகிறோம்.

  இறுதி சடங்கு நாளான 8.08.2018 அன்று மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

  அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைக்க அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல் தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. உடல் செல்லும் வழியெல்லாம் பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட்டது.

  மத்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அனுமதி பெற்று, அரைக் கம்பத்தில் தேசிய கொடி பறந்தது. சவப் பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தியது. குண்டுகள் முழக்கத்துடன், ராணுவ மரியாதை அளித்து உடலை அடக்கம் செய்தது.

  துக்கம் அனுசரிக்கும் வகையில் 7 நாள்கள் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட்டதுடன், அரசு சார்ந்த விழாக்கள் 7 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இரங்கல் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது.

  மெரினா கடற்கரையில் நினைவு இல்லங்கள் எழுப்பக் கூடாது என்று ஏற்கனவே 5 பேர் வழக்கு தொடுத்து அது நிலுவையில் உள்ளது. ஜெயலலிதாவிற்கு நினைவு இல்லம் எழுப்பக் கூடாது போடப்பட்ட வழக்குகள் தான் அவை.

  இப்படி 5 வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் சட்டசிக்கல்கள் எதுவும் எழக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணா சதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போய், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதல்வர் பக்தவச்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர்களின் நினைவிடங்களுக்கு அருகில் கருணாநிதிக்கும் 2 ஏக்கர் இடம் ஒதுக்க அரசு முடிவு செய்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி ?

  தமிழக முதல்வராக பணியாற்றிய ஜானகியம்மாள் இறந்த போது, முதல்வராக இருக்கும் போது இறந்தால் தான் மெரினாவில் இடம் ஒதுக்க முடியும் எனக் கூறி வழக்குகள் எதுவும் இல்லாமலேயே அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி மறுத்திருந்தார். அதற்கான கோரிக்கையை நேரில் முன் வைத்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் இன்றும் நம்மில் இருக்கிறார்கள். அவர்கள் கூறிய தகவல்களை நினைவூட்டுகிறேன்.

  திமுகவின் பழிச்சொற்களால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், நாங்களும் கலங்கப் போவதில்லை. கடமை தவறப்போவதுமில்லை என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This