நடுக்கடலில் மீன்பிடித்து திரும்பிய பாம்பன் மீனவர் வலையில் அரிய வகை உளுவை மீன் சிக்கியது.பாம்பன் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு முழுவதும் நடுக்கடலில் மீன்பிடித்து நேற்று பகலில் கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் போதிய அளவிற்கு மீன்பாடு இருந்தது. இதனிடையே நடுக்கடலில் மீன்பிடித்த பாம்பன் மீனவர் வலையில் அரிய வகை உளுவை மீன் ஒன்று சிக்கியது. வலையில் சிக்கிய மீனை வெளியில் எடுத்து மீண்டும் கடலில் விட முடியாத சூழ்நிலையில் 5 அடி நீளம், 50 கிலோ எடையுடன் இருந்த உளுவை மீனை உயிரற்ற நிலையில் மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.
இவ்வகை மீன்கள் மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் வாழ்கிறது. சுமார் 30 அடி நீளம் வரை வளரக் கூடிய இவ்வகை மீன்கள் ஆழ்கடலில் இரை தேடிச்செல்லும் போது கூட்டத்திலிருந்து தனியாக பிரிந்து ஆழமற்ற கடல் பகுதிக்கு வரும் போது மீனவர் வலையில் சிக்கி விடுகிறது. இவ்வகை மீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில சமயங்களில் மீனவர் வலையில் தானாக சிக்கி விடும் போது வேறு வழியின்றி மற்ற மீன்களுடன் கரை வந்து சேருகிறது. உளுவை மீனை வியாபாரிகள் வாங்குவதற்கு விருப்பம் காட்டாததால் மிகவும் குறைந்த விலைக்கு விலைபோனது.