கொச்சி அருகே நடுக்கடலில் குமரி மாவட்ட மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் பலியான மூன்று மீனவர்களின் உடல்கள் குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த தாசன் மகன் ஏசுபாலன், அவரது தம்பிகள் ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், ராமன்துறையை சேர்ந்த அல்லேசி மகன் யாக்கோபு, ரெங்கநாதன் மகன் யுகநாதன், ஜோசப் மகன் ஷாலு, ரகுநாதன் மகன் எட்வின், முள்ளூர்துறையை சேர்ந்த ஜேசையா மகன் சகாயராஜ், சீமோன் மகன் சகாயராஜ், மணக்குடியை சேர்ந்த லிட்டல் ராஜ் மகன்கள் வாட்சன், மரியராஜ், கேரளா முனம்பம் மல்லியங்கரையை சேர்ந்த ஷிபு, மேற்கு வங்கத்தை சேர்ந்த பீபுல், கொல்கத்தாவை சேர்ந்த நரேன் சர்க்கார் ஆகிய 14 பேர் கேரள மாநிலம் கொச்சி, முனம்பம் துறைமுக பகுதியில் இருந்து ‘ஓசியானிக்’ என்ற படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு கொச்சியில் இருந்து 28 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்திய சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியதில் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் ராமன்துறையை சேர்ந்த அல்லேசி மகன் யாக்கோபு(57), ரங்கநாதன் மகன் யுகநாதன்(45), முள்ளூர்துறையை சேர்ந்த சீமோன் மகன் சகாயராஜ்(50) ஆகியோர் 3 பேர் இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். இவர்களது உடல்கள் கரை சேர்க்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊர்களுக்கு எடுத்துவரப்பட்டது. காயங்களுடன் உயிர் தப்பிய எட்வின், கொல்கத்தாவை சேர்ந்த நரேன் சர்க்கார் ஆகியோர் எர்ணாகுளம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே உடைந்த விசைப்படகின் பாகங்களை விமானப்படை ஹெலிகாப்டர்கள் வாயிலாக நடத்தப்பட்ட தேடுதலில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை கடலோர காவல்படையினர் படகுகளில் சென்று எடுத்து வந்தனர். இதற்கிடையே விசைப்படகு மீது மோதியதாக கருதப்படுகின்ற ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியாவின் எம்.வி தேச சக்தி என்ற எண்ணெய் கப்பலை மங்களூர் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.