கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோடைக் கால பயிர் சாகுபடியில் 1.8 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகள் நடப்புப் பருவத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையிலான காலத்தில் 85.456 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைக் காட்டிலும் 1.8 விழுக்காடு சரிவாகும். இதில் பருத்தி சாகுபடி 4 விழுக்காடு சரிந்துள்ளது. நெல் சாகுபடி 4.2 விழுக்காடு சரிந்துள்ளது. வழக்கமான மழையைக் காட்டிலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரையில் 10 விழுக்காடு குறைவான மழை பெய்துள்ளதுதான் சாகுபடி சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. அதிகபட்சமாக மணிப்பூரில் 64 விழுக்காடு அளவுக்கு மழை குறைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.
பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளிலும் இந்த ஆண்டு நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூலை 28ஆம் தேதி இந்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, சாகுபடி சரிவு 12 விழுக்காடாக இருந்தது. அதற்குப் பிந்தைய ஒரு வாரத்தில் சாகுபடி சரிவு விகிதம் குறைந்துள்ளது.