விவசாயிகளுக்கு லாபம் தரும் கச்சக்கட்டி கருப்பு ஆடு

Forums Communities Farmers விவசாயிகளுக்கு லாபம் தரும் கச்சக்கட்டி கருப்பு ஆடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10154
  Inmathi Staff
  Moderator

  வேளாண் தொழிலில் ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. வெள்ளாடு இனம் தமிழக மக்களின் விருப்ப ஆடாக இருந்தாலும் செம்மறி ஆடுகள் தவிர்க்க முடியாத இனமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக லாபம் தரும் இனமாக இருப்பதுதான்.

  தமிழ்நாட்டில் சென்னை சிவப்பு ஆடு. திருச்சி கருப்பு. மேச்சேரி. கோவை குறும்பை. நீலகிரி. ராமநாதபுரம் வெள்ளை. வெம்பூர். கீழக்கரிசல் ஆகிய எட்டு வகையான செம்மறி ஆடு இனங்கள் உள்ளன. தற்போது ஒன்பதாவதாக கச்சக்கட்டி கருப்பு செம்மறி ஆடு என்ற இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் தேசிய கால்நடை மரபு வள அமைப்பில் கடந்த வருடம் இந்த ஆடு இனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டதிலும் பதிவு செய்யப்பட்டதிலும் நாகர்கோவில் பறக்கையில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ரவிமுருகன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

  கச்சகட்டி கருப்பு செம்மறி ஆடு பற்றி அவரிடமே கேட்டோம். “மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், கச்சக்கட்டி பகுதியில் இந்த ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதனால் இதற்கு கச்சகட்டி செம்மறி ஆடு என்று பெயர் வந்தது. 2015-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. செம்மறி ஆடு வகைகளில் இது ஒன்பதாவது இனமாகும்.

  தென்மாவட்ட மக்கள் வீரத்திலும் தெய்வ நம்பிக்கையிலும் அதிக நாட்டம் கொண்டவர்கள். அவர்களின் வீர விளையாட்டுகள் பெரும்பாலும் கால்நடைகளைச் சார்ந்துதான் இருக்கும். அலங்காநல்லுர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளும், ஆராவயல், விராலிமலை மஞ்சுவிரட்டுகளும், மேலூர், திட்டம்பட்டி, கீழவளவு, குறுக்குச்சாலை ரேக்ளா ரேஸ்களும், வாடிப்பட்டி, மானாமதுரை கிடாச்சண்டைகளும், வெள்ளளுர், வருச்சியூர், காரியாப்பட்டி சேவல் சண்டைகளும் வீரவிளையாட்டுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவைதவிர குல தெய்வங்களுக்கு கோயில்கொடை காலங்களில் நேர்த்திக்கடன் செலுத்த கிடாவெட்டும் நிகழ்ச்சி ஏக பிரபலம். அதுவும் ஆண் தெங்வங்களான சுடலை, கருப்பசாமி சாமிகளுக்கு என்றால் கருப்பு நிறக் கிடாக்களை மட்டுமே பலியிட வேண்டும் என்பது உச்சக்கட்ட தெய்வ நம்பிக்கை ஆகும். அதற்காகவே கருப்பு நிற செம்மறி ஆடுகளை உருவாக்கி இன்றளவும் பராமரித்து வருகின்றனர். யாதவர், பள்ளர் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக அம்மாதிரியான ஆடுகளை இப்போதும் வளர்த்து வருகின்றனர். யாதவர்கள் கறிக்காகவும்,  பளளர் சமுதாயத்தினர் முட்டுச் சண்டைக்காகவும் வளர்க்கிறார்கள்.

  இந்த ஆடுகளின் தனிச்சிறப்பு அதன் அடர்த்தியான கருப்புநிறம் மற்றும் காதுகள் ஆகும். காது மடல்கள் சரியாக வளராமல் பெரும்பாலான ஆடுகள் மூளிக்காதுகளுடன் காணப்படும். முழுக்காதுகள் இருக்கும் ஆடுகளும் உண்டு. கச்சக்கட்டி ஆடுகளின் தலை நெற்றி குழிபோன்று பள்ளமாக இருக்கும். முட்டுச் சண்டைக்கு இதுவே பெரிய பலமாகும்.

   

  நன்றி: பசுமை விகடன்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This