கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சென்னைக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான ஏரிகளில் ஒன்றாக உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி உள்நாட்டு மீனவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள பூதங்குடி,பரிபூரணநத்தம், வாழக்கொல்லை, கலியமலை, நத்தமலை கொள்ளுமேடு, லால்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் எண்ணற்ற மீனவர்கள் உள்ளனர். அவர்கள் 8 மீனவர்கள் சங்கங்களில் தங்களை உறுப்பினராக சேர்த்து மீன் பிடித் தொழில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மீனவர்கள், வீராணம் ஏரியில் மீன் வளத்துறையினர் புதிய மீன் குஞ்சுகளை விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மீனவர் சங்க தலைவர்களில் ஒருவரான சேத்தியத்தோப்பு ராஜா கூறுகையில், போன வருடம் தண்ணீர் வற்றும் நேரத்தில் மீன் வளத்துறையினர் மீன் குஞ்சுகளை விட்டனர். அதனால் எவ்வித பயனுமின்றி, தண்ணீர் வற்றிய பின் அவை செத்து போயின. இதனால், எங்களுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு உண்டானது. இந்த வருடமும், இந்த நிலை தொடராமலிருக்க மீன் வளத்துறையினர் மீன் குஞ்சுகளை முன்னரே விட வேண்டும்” எனக் கூறினார்.