பாரம்பரிய நெல் – கள்ளிமடையான் நெல் சாகுபடி

Forums Communities Farmers பாரம்பரிய நெல் – கள்ளிமடையான் நெல் சாகுபடி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #10022
  Inmathi Staff
  Moderator

  வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம், மேட்டு நிலத்துக்கான ரகம், பள்ளப்பகுதிக்கான ரகம், களர் மண்ணுக்கான ரகம், உவர் மண்ணுக்கான ரகம் எனப் பல வகைப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வந்துள்ளனர் நம் முன்னோர். அதனால்தான், நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் என ஏதுமில்லாத சூழ்நிலையிலும்கூடத் தற்சார்பாக விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இன்று பாரம்பர்ய ரகங்களையும் கால்நடைகளையும் கைவிட்டதால், பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றும் வகையில் இயற்கை விவசாயிகள் பலரும் பாரம்பர்ய ரகங்களைத் தேடிப்பிடித்து அவற்றைப் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  30 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 20 அடி நீளம், 15 அடி அகலத்துக்கு நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் சேற்றுழவு செய்து அதில் 50 கிலோ இலைதழைகளைப் போட்டு மட்க விட வேண்டும்.

  பிறகு நிலத்தைச் சமப்படுத்திப் பஞ்சகவ்யாவில் நனைத்து விதைநேர்த்தி செய்யப்பட்ட 3 கிலோ விதைநெல்லைத் தூவி விதைக்க வேண்டும். விதைத்த 10 மற்றும் 20-ம் நாள்களில் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 23-ம் நாளுக்கு மேல் நாற்றுகள் நடவுக்குத் தயாராகிவிடும்.

  நடவு வயலில், 3 சால் உழவு ஓட்டி, தண்ணீர் கட்டி நிலத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பிறகு, குத்துக்கு 2 நாற்றுகள் என்ற கணக்கில் 1 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 22-ம் நாள் களைகளை அழுத்தி விட வேண்டும். 25-ம் நாள் 25 கிலோ பசுஞ்சாணத்தை வாய்மடையில் வைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 30-ம் நாள் வாய்மடையில் 3 அடி நீளம், 2 அடி அகலம் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். அக்குழியில் எருக்கன், வேம்பு, நொச்சி உள்ளிட்ட இலைகளை 25 கிலோ அளவுக்குப் போட்டு, ஒரு கல்லை வைத்து 10 கிலோ சாணத்தைப் போட வேண்டும்.

  இந்தக்குழியில் தண்ணீர் விழுந்து செல்லும்போது கொஞ்சம் கொஞ்சமாக வயல் முழுவதும் பரவும். இது பயிருக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். பூச்சிவிரட்டியாகவும் பலன்தரும். 45-ம் நாள் களையெடுத்து மறுநாள் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 100 நாள்களுக்கு மேல் கதிர் பிடித்து 130 நாள்களுக்கு பிறகு, கதிர்கள் முற்றி அறுவடைக்கு வரும்.

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This