Read in : English

Share the Article

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரத்தையும் சுயாட்சியையும் தரும்வண்ணம் சென்னையிலும் மற்ற மாநகரங்களிலும் முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின்படி குடிமக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விதமாக வார்டு கமிட்டிகளும், ஏரியா சபாக்களும் (கிராமசபைகள் போன்று) உருவாக்கப்படவிருக்கின்றன. ஆனால், ஜனநாயகமும் அதன் முக்கிய அம்சமான வெளிப்படைத்தன்மையும் தமிழக அரசு அமைக்கப்போகும் அந்த வார்டு கமிட்டிகள், ஏரியா சபாக்கள் அல்லது கிராமசபைகள் தொடர்பான விதிமுறைகளில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரத்தையும் சுயாட்சியையும் தருவதற்கு மாநில அரசுகளுக்கு விருப்பமில்லை என்று ஏற்கெனவே இருக்கும் விமர்சனம் இப்போது மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்பு, 2022 ஜூன் 24 அன்று நடைமுறைக்கு வந்திருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபாக்கள்) விதிமுறைகள், 2022 வாக்காளர்களை வருத்தப்பட வைத்திருக்கிறது. தமிழகத்தின் இந்தப் புதிய சட்டத்தின் ஆதிமூலங்கள் 74-ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், திருத்தப்பட்ட சென்னை மாநகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம், 2006-ல் ஒன்றிய அரசு முன்மொழிந்த மாடல் கம்யூனிட்டி பார்ட்டிசிபேஷன் சட்டம் ஆகியவைதாம்.

அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் பிரிவு 243(எஸ்) வார்டு கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு ஆணையிடுகிறது. அதைப்போல, சென்னை மாநகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் வார்டு கமிட்டிகளையும், ஏரியா சபாக்களையும் அமைப்பதற்கு வழிமுறைகளை வகுத்திருக்கிறது. நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்த முன்பு வந்த ஜவகர்லால் நேரு தேசிய புறநகர் புதுப்பித்தல் திட்டம் விதித்த நிபந்தனைகளில் ஒன்று வார்டு கமிட்டிகளையும், ஏரியா சபாக்களையும் அமைக்க வேண்டும் என்பதுதான்.

உள்ளூர் விசயங்களைத் திட்டமிடுவதில் மக்கள் நேரடியாகப் பங்கு வகிப்பதற்கும், அவர்கள் தங்கள் கண்காணிப்புப் பணியைச் செய்வதற்குமான கூடுதலான அமைப்புகளாக வார்டு கமிட்டிகளும் ஏரியா சபாக்களும் செயல்படுவதற்கான ஆதாரசுருதி தமிழகப் புதிய சட்டத்தின் விதிஎண் 8

அதிமுக்கிய விதி
தமிழகப் புதிய சட்டத்தின் விதிஎண் 8, உள்ளூர் விசயங்களைத் திட்டமிடுவதில் மக்கள் நேரடியாகப் பங்கு வகிப்பதற்கும், அவர்கள் கண்காணிப்புப் பணியைச் செய்வதற்குமான கூடுதலான அமைப்புகளாக வார்டு கமிட்டிகளும் ஏரியா சபாக்களும் செயல்படுவதற்கான ஆதாரசுருதியைக் கொண்டிருக்கிறது.

பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட ஒரு பகுதியில் ஒரு வார்டில் பத்து ஏரியாக்கள் இருக்கலாம் என்று புதியவிதி சொல்கிறது. மக்கள்தொகை 5 இலட்சம் வரை என்றால், ‘4 அல்லது 5’ ஏரியாக்கள் ஒரு வார்டை உருவாக்கலாம் என்று விதி சொல்கிறது. ஒரு வார்டு கமிட்டியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை வார்டிலிருக்கும் ஏரியாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது என்பதால், கமிட்டிகளிலிருக்கும் உறுப்பினர் பலம் குறைபடுகிறது. முனிசிபாலிட்டி என்றால் ஒரு வார்டில் நான்கு ஏரியாக்கள் இருக்கலாம்; பேரூராட்சி என்றால் மூன்று ஏரியாக்கள் ஒரு வார்டை உருவாக்கலாம் என்று விதி சொல்கிறது.

வார்டு கமிட்டிக்கு கார்ப்பரேஷன் கவுன்சில் ஓர் உறுப்பினரை நியமிக்கத் தேவையான அளவுகோல்கள் பற்றி விதிகள் ஒன்றும் சொல்லவில்லை; ஒன்றுக்கும் மேற்பட்ட நியமனங்கள் விஷயத்திலும் விதிகள் வாய்திறக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் உட்பட அனைத்து அரசியல் தொடர்பு கொண்டவர்களையும் அந்தப் பதவிகளில் நியமிப்பதைத் தடுக்கும் வகையில் விதிகள் பலமாக உருவாக்கப்படவில்லை என்றவொரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க:

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவை நிர்வாக அதிகாரங்கள்!

ஸ்வத்சித் சர்வேக்ஷன் அறிக்கை: கழிவு மேலாண்மையில் பின்தங்கியுள்ளதா தமிழ்நாடு?

தங்கள் ஏரியாக்களுக்கான திட்டங்களைத் தயாரிக்கவும், ஏரியாக்களின் குடிமைத் தேவைகளை எடுத்துரைக்கவும் குடியிருப்புவாசிகளுக்கு வாய்ப்புத் தருபவை ஏரியா சபாக்கள். வார்டு கவுன்சிலரைத் தலைவராகக் கொண்டு செயற்படும் பொதுமக்களுக்கு உயர்நிலைப் பங்களிப்பைத் தர உதவுகின்றன வார்டு கமிட்டிகள். இந்த ஏரியா சபாக்களுக்கும், வார்டு கமிட்டிகளுக்கும் ஒன்றிய அரசு சுற்றில் விட்டிருந்த மாடல் நகர ராஜ் மசோதா என்றழைக்கப்படும் மாடல் கம்யூனிட்டி பார்ட்டிசிபேஷன் சட்டம் வலுச்சேர்க்கிறது.

ஆனால், நீண்ட இடைவெளிவிட்டு தமிழ்நாடு புகுத்தியிருக்கும் அம்சங்கள் சட்டரீதியிலான உள்ளாட்சி சார்ந்த அமைப்புகளின் நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் உட்பட அனைத்து அரசியல் தொடர்பு கொண்டவர்களையும் அந்தப் பதவிகளில் நியமிப்பதைத் தடுக்கும் வகையில் விதிகள் பலமாக உருவாக்கப்படவில்லை

“வளர்ச்சி, நலன் சார்ந்த முன்னுரிமைகளைத் தீர்மானித்து அதற்குத் தகுந்தபடி திட்டங்களை உருவாக்கி அவற்றை வார்டு கமிட்டிக்கு அனுப்பிவைக்கும் அதிகாரத்தை ஏரியா சபாக்களுக்கு வழங்கலாம் என்கிறது கம்யூனிட்டி பார்ட்டிசிபேஷன் சட்டம். நலத்திட்டங்களின் பயனாளிகளை அடையாளம் காணுகின்ற பணியையும் ஏரியா சபாக்கள் செய்யலாம். இதுவோர் அதிகாரமிக்க பணி. இதை உள்ளூர் மட்டத்தில் சிறப்பாகச் செய்யலாம். ஏனென்றால், வார்டு மக்களால்தான் எளிதாக அத்தகையோரை இனங்காண முடியும்.

தற்போதைய தமிழக விதிகள், பரிந்துரை அளிப்பது என்னும் பலவீனமான பணியை மட்டுமே ஏரியா சபாக்களுக்குத் தந்திருக்கின்றன. “ஏரியா சபா கருத்துகளைச் சொல்லி, ஏரியாவுக்கான திட்டங்களை, முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ, கவுன்சிலுக்குச் சமர்ப்பிக்கலாம். மேலும், குடியிருப்புப் பகுதிகளின் குடிமைத் தேவைகளைப் பற்றிய குறைகளைக் கவுன்சிலுக்கு ஏரியா சபா எடுத்துரைக்கலாம்” என்று சொல்கிறது அரசு ஆணை. அந்த ஆணையின்படி, ஏரியா சபாக்களின் பணிகளும் வார்டு கமிட்டிகளின் பணிகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன.

ஏரியா சபாக்களும் வார்டு கமிட்டிகளும் கார்ப்பரேஷனின் அல்லது முனிசிபல் கவுன்சிலின் செயல்அதிகாரி செய்யச் சொல்லும் பணிகளையும் செய்யலாம் என்றோர் அம்சமும் விதிகளில் இருக்கிறது.

செயல்திட்டம் விடுபட்டுப் போனது
தகவல் தொழில்நுட்பமும் இணையமும் தமிழகத்தில் வியாபித்துள்ளன. வெளிப்படையான நிர்வாகம் தருவதாக திமுகவேறு தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்திருக்கிறது. என்றாலும், நிர்வாகத்தில் பொதுமக்கள் பங்கெடுப்பதை விரிவாக்கும் முக்கிய வாய்ப்புகளை திமுக அரசு கொண்டுவந்திருக்கும் விதிகள் தவறவிட்டிருக்கின்றன.

உள்ளாட்சி சார்ந்த அமைப்புகளின் கூட்டங்கள் நடக்கும் இடம், விவாதிக்கப்படும் விசயங்கள் போன்ற விவரங்கள் பிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று விதிகள் குறிப்பாக வலியுறுத்தவில்லை. ஏரியா சபாக்களிலும் வார்டு கமிட்டிகளிலும் நடத்தப்படும் விவாதங்களை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முன்பு இலாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களையும், டெண்டர்களையும் கையாளும் கமிட்டிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இரகசியமாகச் செயற்பட்டனர். அந்த வழக்கத்தை ஒழிக்கும் வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது.

ஏரியா சபாக்களின் உரிமைகள் பற்றிய விசயத்தில் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் திட்டத்தின் நோக்கத்திற்கும், தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளுக்கும் இடையே பெரியதோர் இடைவெளி இருக்கிறது.

கம்யூனிட்டி பார்ட்டிசிபேஷன் சட்டம் ஏரியா சபாக்களுக்குப் பின்வரும் அதிகாரங்களைத் தருகிறது:

· செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றிய தகவல்களை அதிகாரிகளிடம் பெறுதல்

·ஏரியா சபா சம்பந்தமான தீர்மானங்களை, தீர்மானங்களின் காரணங்களை, பின்பு மேற்கொள்ள வேண்டிய செயல்களை ஏரியா சபாவுக்கு வார்டு கமிட்டி சொல்ல வேண்டும்

·பொதுநலம் சார்ந்த விசயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு குழுக்களுக்கிடையே ஒற்றுமையை இணக்கத்தை ஏற்படுத்துதல்

வார்டு கமிட்டி வருடாந்திரத் திட்டத்தையும், அதை நிறைவேற்ற வேண்டிய பட்ஜெட்டையும், வார்டின் உட்கட்டமைப்பு வரைபடத்தையும் தயாரித்து உள்ளூர் மட்டத்துச் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் மாடல் கம்யூனிட்டி பார்ட்டிசிபேஷன் சட்டத்தில் ஓர் ஆணையிருக்கிறது.

இவையெல்லாம் தமிழக விதிமுறைகளில் விடுபட்டுப் போய்விட்டன.

ஏரியா சபாக்களின் உரிமைகள் பற்றிய விசயத்தில் அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் திட்டத்தின் நோக்கத்திற்கும், தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள விதிகளுக்கும் இடையே பெரியதோர் இடைவெளி இருக்கிறது

2021-ன் தொடக்ககட்டத்தில் அஇஅதிமுக ஆட்சியின் போது கிராமசபைகளை நடத்துவதைப் பரப்புரையாக்கிய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைச் சரியான திசையில் பரவலாக்க வேண்டும். ஜனநாயக ரீதியிலான உள்ளாட்சி முறைமைகளுக்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களின் அடிப்படை நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். திறன் கட்டமைப்பும், நிதி சுயாட்சியும் இயல்பாகவே பின்தொடர்ந்துவரும்.

ஏரியா கமிட்டியில் ஏராளமான குடியிருப்புவாசிகள் இடம்பெற வேண்டும்; அதற்காக ஒரு வார்டில் இருக்கும் ஏரியா பற்றிய வரையறைகள் விரிவாக்கப்பட வேண்டும். இதற்கான சீர்திருத்தங்கள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். ஒரு முனிசிபல் வார்டின் செயற்பாடுகள் இணையத்தில் காணக் கிடைக்க வேண்டும். ஏரியா சபாக்களுக்கும், வார்டு கமிட்டிகளுக்கும் அனுபவமும் திறனும் வாய்த்தவர்கள் தங்கள் பங்களிப்பைத் தரும் வண்ணம் விதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தச் சீர்திருத்தங்கள் எல்லாம் கவுன்சிலர்களின் அதிகாரங்களைத் தடைசெய்வதில்லை. மாறாக, அவை அவர்களை வாக்காளர்களுக்கு அருகே, குடியிருப்புவாசிகளுக்கு அருகே கொண்டுசெல்லும்.

உயர்ந்ததொரு குடிமைத் தலைமையைத் தங்கள் பிரதிநிதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Share the Article

Read in : English