Read in : English

Share the Article

சரக சம்ஹிதை என்னும் ஆதிகால ஆயுர்வேதப் பனுவலின் ஆசிரியரும் அசாதாரணமான மருத்துவருமான சரகர், வட இந்தியாவில் கிமு 200-க்கும் கிபி 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓங்கி வளர்ந்த குசான சாம்ராஜ்யத்தின் காலகட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுபவர். ஆயுர்வேதத்தின் மூன்று அடிப்படைப் பனுவல்களில் ஒன்று சரக சம்ஹிதை. மற்ற (இரண்டையும் இயற்றியவர்கள் சுஷ்ருதாவும், வாக்பாதாவும்). மாமுனி ஆத்ரேயாவின் ஆயுர்வேதம் பற்றிய போதனைகளின் தொகுப்பான ‘அக்னிவேஷ தந்திரம்’ என்னும் நூலைப் படைப்பாற்றலோடு திருத்தி எழுதிய புதிய பனுவல்தான் சரக சம்ஹிதை.

ஆயுர்வேதத்தின் ஆதிமூலம் பிரம்ம வேதம் என்றழைக்கப்படும் அதர்வண வேதம். பெரும்பாலான அதன் மந்திரங்களில் தத்துவ, ஆன்மீகக் கருத்துக்கள் கொட்டிக் கிடந்தாலும், ஆறாயிரம் துதிப்பாடல்களிலும், ஓராயிரம் வசன வரிகளிலும் மனித உடல், அதன் நோய்கள், நிவாரணங்கள் ஆகியவற்றைப் பற்றிய விசயங்கள் காணக் கிடைக்கின்றன. அச்சமூட்டும் கனவுகளாலும், செய்த பாவங்களால் விளைந்த நோய்களாலும் பிணிக்குள்ளான நோயாளிகளின் மனதில் நம்பிக்கையைத் தூண்டும் முகமாக நோய்தீர்க்கும் மந்திரங்கள்  உச்சாடனம் செய்யப்படுகின்றன. ஆயுர்வேதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அதர்வண வேதத்திற்கு விசுவாசமாக இருக்கும்படி சரகர் வேண்டிக் கேட்டுக் கொண்டாலும், மருத்துவத்தைப் பற்றி, வைத்தியத்தைப் பற்றிய அவரது கருத்து வேறுபட்டது.

மேலும் படிக்க:

மருத்துவ மாணவர்களுக்கு சரகர் ஷபத் உறுதிமொழி கிளப்பிய சர்ச்சை!

பல்லாங்குழி: பழைய விளையாட்டுக்கு பேராசிரியர் பரமசிவன் சொல்லும் புதிய விளக்கம்!

“ஆயுர்வேதம் பக்தியை அடிப்படையாகக் கொண்டது. நோய் என்பது கடவுள் தரும் தண்டனையாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் அதனுடன் தொடர்புடைய ஒரு கடவுள் உண்டு. பல்வேறு சடங்குகள் மூலம், துதிப்பாடல்கள் என்னும் மந்திரங்கள் மூலம், கடவுளைச் சாந்தப்படுத்துவது நோய்தீர்க்கும் செயல்முறையின் ஓர் அம்சம். இந்த பக்தி அம்சங்களுக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர். அறிவுசார்ந்த மருத்துவம் அவர் கொண்டுவந்தது,” என்றார் டாக்டர் எம். எஸ். (மார்த்தாண்டவர்மா சங்கரன்) வாலியாதன். புகழ்பெற்ற இதய அறுவைசிகிச்சை நிபுணரான அவர் ‘சரகரின் கொடை’, ‘சுஷ்ருதாவின் கொடை,’ ‘வாக்பாதாவின் கொடை’ உட்பட பல  நூல்களை எழுதியுள்ளார்.

சரக சம்ஹிதை என்னும் ஆதிகால ஆயுர்வேதப் பனுவலின் ஆசிரியர் சரகர், வட இந்தியாவில் கிமு 200-க்கும் கிபி 100-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓங்கி வளர்ந்த குசான சாம்ராஜ்யத்தின் காலகட்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுபவர்

இன்றைய மருத்துவர்களிடமிருந்து சரகர் எப்படி வேறுபட்டவர்? சரகர் வெறும் மருத்துவர் அல்ல. நோயைக் கண்டுபிடிக்க முயலும்போது நோயாளியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விசயங்களையும் அவர் பரிசோதிப்பார். நோயாளியின் அண்டை வீட்டுக்காரர்களைப் பற்றி விசாரிப்பார்; மற்றும் அவரது சுற்றுப்புறச்சூழல் பற்றி விசாரிப்பார். அண்டை வீடுகளில் ஏதாவது மரணம் நிகழ்ந்திருக்கிறதா அல்லது அந்தப் பகுதியில் ஏதேனும் விலங்குகள் செத்துப் போயிருக்கின்றனவா என்பது பற்றியெல்லாம் சரகர் விசாரிப்பார். சுற்றுப்புறச் சூழலும் அவருக்கு மிகவும் முக்கியம். “நோயாளிக்கு வைத்தியம் செய்வதற்கு அவரை முழுமையாகப் பரிசோதிப்பது முக்கியம் என்று சரகர் நம்பினார். இதுதான் அவரை ஓர் அசாதாரணமான மருத்துவராக்கியது,” என்றார் டாக்டர் வாலியாதன். சென்னை வராஹமிஹிரர் விஞ்ஞான அமைப்பு சனியன்று நடத்திய மாதாந்திரச் சொற்பொழிவில் “சரக சம்ஹிதை: இந்திய மருத்துவத்தின் ஆதிப் பனுவல்,” என்ற தலைப்பில் டாக்டர் வாலியாதன் உரை நி்கழ்த்தினார்.

டாக்டர் எம் எஸ் வலியாதன்

இந்திய தேசிய விஞ்ஞான அகாதெமியின் மேனாள் தலைவர் டாக்டர் வாலியாதன். இந்திய அரசாங்கத்தின் தேசிய ஆராய்ச்சிப் பேராசிரியரும் கூட. கேரளா பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற அவர் இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்பு ஜான் ஹாப்கின்ஸ் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைப் பயிற்சி எடுத்துக்கொண்டார் அவர். இந்தியாவுக்குத் திரும்பியதும் வாலியாதன் முதலில் டில்லியில் உள்ள சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்பு மெட்ராஸ் ஐஐடியில் ஆசிரியராக வேலை பார்த்தார். கேரள அரசின் அழைப்பின்பேரில் சென்ற வாலியாதன், பின்னாளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கழகம் என்று பெயர் பெற்ற ஸ்ரீ சித்திரைத் திருநாள் கழகத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவமனையையும், ஆராய்ச்சி மையத்தையும் உருவாக்கினார். அவரது குழு உள்நாட்டு இதய வால்வு ஒன்றை உருவாக்கியது; அதற்கு சித்ரை வால்வு என்று பெயரிடப்பட்டது.  நவீன அலோபதியில் நிபுணரான வாலியாதனுக்கு ஆயுர்வேதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு ஒரு காரணம் இருந்தது.

1990-களில் திருவனந்தபுரத்தில் அறுவைச் சிகிச்சை அறையில் ஒரு நோயாளிக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்தார் வாலியாதன்.  இப்படிப்பட்ட சிகிச்சைகள் அவரது தொழில் வாழ்கையில் சகஜமானவைதான். என்றாலும் குறிப்பிட்ட இந்தச் சிகிச்சை அவரை நம் நாட்டைப் பற்றியும் நாட்டின் பாரம்பரியத்தைப் பற்றியும் நிறையவே யோசிக்க வைத்தது. அந்தச் சிகிச்சை அறையில் நோயாளியின் இதயத்தைத் தவிர அனைத்தும் வெளிநாட்டுப் பொருட்கள்; மருந்து, அறுவைச் சிகிச்சைக் கருவிகள், முறைகள் எல்லாம் வெளிநாட்டு உபயம். ”பல்வேறு துறைகளில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மருத்துவத் துறையில் நீண்ட காலமாக நாம் ஆங்கிலேய முறையை மட்டுமே பின்பற்றி வருகிறோம்.  ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஓர் உதாரணம். இப்படி நிறைய இருக்கின்றன. ஆனால் நம் பாரம்பரியம் என்று வரும்போது நாம் ஏன் மலடாகிப் போய்விட்டோம்? இப்படி என்னை நானே கேட்டுக்கொண்டேன். இந்த உணர்வுதான் என்னை சரகர் உலகத்திற்குக் கொண்டு சென்றது. நமது பாரம்பரிய மருத்துவக் கட்டமைப்புக்குள் நான் நுழைந்தேன்,” என்றார் அவர்.

இன்றிருக்கும் ஏராளமான நோய்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தவைதான். அப்படியென்றால் அவற்றை அவர்கள் எப்படிக் குணப்படுத்தியிருப்பார்கள்? இந்த வினாவுக்கு வாலியாதன் விடை கண்டுபிடிக்க முயன்றார். சரகரின் மருத்துவப் பிரதி அவரைக் கவர்ந்தது. ஆயுர்வேத நிபுணர் ராகவன் திருமுல்பாடு என்பவரின் உதவியோடு ஆயுர்வேதத்தைக் கற்க ஆரம்பித்தார் வாலியாதன். “நவீன மருத்துவத்தை பெரிய அறிஞர்களிடம் நான் கற்றிருக்கிறேன். அதுதான் அறிவுலகத்தின் எல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் என் கருத்து தவறு. நான் தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டேன். மற்ற கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நமக்கு பணிவு வேண்டும். நான் ஆயுர்வேதத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் போது எனக்கு வயது 65,” என்றார் வாலியாதன். 1999-ல் சரகரையும் அவரது படைப்பையும் கற்பதற்கு அவருக்கு ஹோமி பாபா கவுன்சில் ஃபெல்லோஷிப் வழங்கியது.  அதன் விளைவாக பின்னாளில் சரகர் சம்ஹிதையை அவர் ‘சரகரின் கொடை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் ‘சுஷ்ருதாவின் கொடை,’ ‘வாக்பாதாவின் கொடை’ ஆகிய நூல்களும் அவர் எழுதினார்.

ஆயுர்வேதத்தின் ஆதிமூலம் பிரம்ம வேதம் என்றழைக்கப்படும் அதர்வண வேதம். அதன் ஆறாயிரம் துதிப்பாடல்களிலும், ஓராயிரம் வசன வரிகளிலும் மனித உடல், நோய்கள், நிவாரணங்கள் ஆகியவற்றைப் பற்றிய விசயங்கள் காணக் கிடைக்கின்றன.

அறுவைச் சிகிச்சை மற்றும் மருத்துவம் ஆகியவற்றைப் பேசும் சரக சம்ஹிதை அதன் தத்துவ உள்ளடக்கத்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி) ஆனது என்பது ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களில் ஒன்று. ஆனால் சரகர் அத்தோடு நிற்கவில்லை என்கிறார் வாலியாதன். “பஞ்ச பூதங்களையும் தாண்டி எந்த வரையறைக்குள்ளும் அடங்காத, நிர்த்தாட்சண்யமில்லாத ஏதோவொரு சக்தி இருக்கிறது என்கிறார் அவர் (சரகர்). வளி அல்லது காற்றுக்கு (வாயு) முதன்மையான முக்கியத்துவம் தருகிறார் சரகர். மூச்சுக்காற்று (பிராணன்) இரத்தத்தின் போக்கில் இழைந்தோடுகிறது. வாயுவின் பணிகள்தான் மனித உடல் சுவாசப்பணியின் அடிப்படை,” என்றார் வாலியாதன். “அதர்வண வேதத்திலும், சரக சம்ஹிதையிலும் தலையும் மூளையும் ஒன்றுக்கொன்று வேறுபடுத்திக் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் இரண்டு படைப்புகளுமே மூளையை பிரக்ஞையோடு அல்லது மனநோய் அல்லது காக்காவலிப்பு போன்ற மூளைக் கோளாறுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை. சரகரின் முன்னோடியான பேலா மட்டுமே பிரக்ஞையின் இடத்தை தலையுச்சிக்கும், அண்ணத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடித்தார்,” என்றார் வாலியாதன்.

மேலும் அவர் சொன்னார்: “பிரக்ஞையின் படிநிலைகளைப் பற்றியும் முதுகுத் தண்டுவடத்தோடும் மூளையோடும் அவை கொண்டிருந்த உறவைப் பற்றியும் பேசிய தாந்திரீகக் கருத்துக்களை ஆதிகாலத்து ஆயுர்வேத மேதைகள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது புதிராக இருக்கிறது. சரக சம்ஹிதையும், த்ருதபலா அதை மறுபார்வையுடன் திருத்தி எழுதிய படைப்பும் உருவான காலத்தில் தாந்திரிகம் இல்லாமல் போயிருக்க வாய்ப்பு இல்லை. கழுத்து தமனியங்களின் துடிப்புகளைச் சரகர் கவனித்திருக்கிறார். ஆனால் அவர் அவற்றை இதயத்தின் பணிகளோடு தொடர்புப்படுத்திப் பார்க்கவில்லை. “இதயத்திலிருந்து இரத்தம் தாயின் கருப்பைக்குள்ளிருக்கும் நஞ்சுக்கொடிக்குப் போகிறது என்பதைச் சரகர் கண்டுபிடித்த பின்புதான், திசுக்கள் இரத்தத்தைப் பெறுகிறது என்பது தெளிவாகச் சொல்லப்பட்டது. இதயத்திலிருந்து நிகழும் இரத்த வினியோகம் அறியப்பட்டது; ஆனால் இரத்தம் திரும்பி வருவது அறியப்படவில்லை. மனித உடலின் முக்கிய துளைகளில் இருக்கும் உள்ளார்ந்த உறுப்புகளைப் பற்றி சரகருக்குப் பரந்துபட்ட அறிவு இருந்தது.”

பிணத்தை அறுத்துக் கூறுபோட்டுப் பார்த்து மனித எலும்புக்கூட்டை ஆராய்ந்தது  இந்திய மருத்துவத்தின் ஆகப்பெரும் சாதனை. நவீன மனித உடல்கூறு சாஸ்திரம் எலும்புக்கூடு 200 எலும்புகளாலானது என்று சொல்கிறது. ஆனால் சரகர் 360 எலும்புகள் என்கிறார். ஏன் இந்த வித்தியாசம்?  சரகர் எலும்புக்கூட்டில் இருக்கும் எல்லா திசுக்களையும் – பற்களை, குருத்தெலும்புகளை, துருத்தும் எலும்புகளை – கணக்கில் எடுத்துக் கொண்டார். அதனால்தான் இந்த வித்தியாசம். சுஷ்ருதா சொன்ன 300 எலும்புக் கணக்கையும் சரகர் கணக்கு தாண்டியது. ஏனென்றார் சரகர் தான் எடுத்த எலும்புகளின் பட்டியலில் பற்களின் பேழையையும், நகங்களையும் சேர்த்துக்கொண்டார் என்றார் வாலியாதன்.

ஆயுர்வேதம் பக்தியை அடிப்படையாகக் கொண்டது. நோய் என்பது கடவுள் தரும் தண்டனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பக்தி அம்சங்களுக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர். அறிவுசார்ந்த மருத்துவம் அவர் கொண்டுவந்தது.

”புத்தமதம் வேதங்களை மறுதலித்த போதும், புத்தமதக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் சரகருக்கு வெறுப்பு இருந்ததில்லை. புலன்வழி பார்வையின் தற்காலிகத் தன்மை கருத்தும், பேராசையை ஒழித்தால் துன்பங்களிலிருந்து நிரந்தர விடுதலை பெற முடியும் என்ற கருத்தும் பரந்த அறிவுகொண்ட சரகரின் மனத்திற்குப் பிடித்துப் போனது. சரகரின் மனதில் ஒருபக்கம் வேதச் சடங்குகள் மீதான, கடவுள்கள் மீதான பற்று இருந்தது; இன்னொரு பக்கம் தத்துவத்தின் மீதான தாராளமான அறிவுத்தேடல் மிக்க பற்று இருந்தது; இந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாட்டையும் சரகர் பார்க்கவில்லை,” என்றார் வாலியாதன். “இன்று மக்கள் நினைக்கிறார்கள், ஆயுர்வேதம் என்றால் சைவயுணவுப் பொருட்கள்  நிரம்பியது என்று. தவறு. விலங்குப் பொருட்களும் ஒயின் போன்ற பானகங்களும் ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேதம் என்றால் ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கைமுறை என்று பொருள்,” என்றார் அவர்.

சரகர், சுஷ்ருதா, வாக்பாதா போன்ற ஆன்றோர்களைக் கொண்ட ஆயுர்வேதம் என்னும் நமது பாரம்பரிய மருத்துவமுறை இன்று நம்நாட்டில் ஏன்  கீழான நிலையிலே வைத்துப் பார்க்கப்படுகிறது? “சரகரின் போதனா முறை என்பது அன்றைய காலத்தில் வழமையாக இருந்த குரு-சிஷ்ய உரையாடல் முறைதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆயுர்வேதத்தை எப்படி கற்பிக்க வேண்டுமோ அப்படி அது போதிக்கப்படுவதில்லை இன்றைய கல்லூரிகளில்,” என்றார் வாலியாதன். இந்தியாவில் மருந்துக் கட்டுப்பாடு என்பது நம்பிக்கையற்ற விசயம் என்றார் அவர். “ஆயுஷ் அமைச்சகம் 500 மருந்துக் கலவைகளை வெளியிட்டிருக்கிறது. ஆனால் சந்தையில் 1,500 மருந்து வகைகள் கிடைக்கின்றன.  அவற்றில் பெரும்பாலானவை பரிசோதிக்கப்படாதவை; ஆய்வு செய்யப்படாதவை. அதுதான் துயரம்,” என்றார். பெரிய ஆயுர்வேத நிலையங்களில் ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன. ஆனால் சிறிய மையங்களில் இல்லை.

  ”ஆய்வுக்கூடங்கள் இல்லாத சிறிய ஆயுர்வேத நிலையங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும். ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான ஆயுர்வேத மருந்து ஆலைகள் விஞ்ஞானரீதியில் இயங்குவதில்லை. மருந்தின் தரத்தை யாராலும் சோதித்துப் பார்க்க முடியாது. ஏராளமான ஆய்வுக் கூடங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் சந்தைகளில் தரமற்ற ஆயுர்வேத மருந்துப் பொருட்களே நிரம்பி வழியும்,” என்று முடித்தார் வாலியாதன்.

Share the Article

Read in : English